coronavirus news: கொரோனா வைரஸ் கோழிக் கறி மூலம் பரவுகிறதா?

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2020 (16:56 IST)
கோழி இறைச்சி உண்பதால் கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற ஒரு வதந்தி ஆந்திர பிரதேச மாநிலத்தில் பரவி வருகிறது. இது அங்கே கோழிக்கறி விற்பனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கோழிக்கறி முகவர்கள் மற்றும் உள்ளூர் கறி விற்பனையாளர்கள் இதன் விளைவை அனுபவித்து வருகின்றனர். எனவே உள்ளூர் இறைச்சி விற்பனையாளர்கள் இலவச பொருட்களை கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் ஆட்டு இறைச்சி விற்பனையாளர் ஒருவர் ஐந்து கிலோ இறைச்சி வாங்குபவர்களுக்கு ஹெல்மட் இலவசமாக வழங்கி வருகிறார்.

ஆந்திராவில் பல கோழிப் பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் வேகமாக உயிரிழந்து வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது. எனவே இறைச்சி விற்பனை மற்றும் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

ஜனவரி மாத இறுதியில் ஒரு கிலோ பிராய்லர் கோழியின் சில்லறை விலை 200 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது அது ரூ.150ஆக குறைந்துள்ளது.

ஆந்திராவின் கால்நடை வளர்ச்சி முகமையின் துணை இயக்குநர் சாய் பட்சாராவ், இந்த கோழிகள் உயிரிழந்ததற்கு மோசமான ஒரு கால்நடை நோயே காரணம் என பிபிசியிடம் தெரிவித்தார்.

இது பிராய்லர் கோழிகளுக்கு முறையான தடுப்பூசி வழங்காததால் ஏற்பட்டுள்ளது. இந்த பறவைகளுக்கு முறையான தடுப்பூசி சரியான நேரத்தில் வழங்கவில்லை என்றால், அவைகளுக்கு நோய்த் தொற்று வேகமாக பற்றி அது வேகமாக பரவத் தொடங்கும்.

இதுதான் ஆந்திரப் பிரதேசத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதுவே இந்தப் பறவைகளின் இறப்புக்குக் காரணம். இந்த இறந்துபோன பறவைகள் முறையாக புதைக்கப்பட வேண்டும். ஆனால் சில கோழிப் பண்ணை உரிமையாளர்கள் ஆயிரக்கணக்கான பறவைகளை சாலையில் வீசுகின்றனர்.

அதைக் காணும் மக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. அதைப் பார்த்த அவர்கள் கோழிப் பண்னைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்துக் கொள்கின்றனர். இதனால் இயல்பாக இறைச்சி விற்பனை குறைந்துள்ளது.

இறைச்சி விற்பனைக்கு தடை

பாதுகாப்பு காரணமாக ஆந்திராவின் பல நகரங்களில் இறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ளனர் அதிகாரிகள். மேலும் பல மாநிலங்களுக்கு கோழி ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் கோழிப் பண்ணைகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஆந்திரப் பிரதேசத்தில் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நிலை என்ன?

"கோழி இறைச்சி உண்பதால்தான் கொரோனா வைரஸ் பரவுகிறது என்று ஆந்திரப் பிரதேசத்தில் சமூக ஊடகங்கள் மூலம் வதந்தி பரவியது. அந்த வதந்தி தமிழகத்திலும் பரவியுள்ளதால், கோழி இறைச்சி வாங்கவே மக்கள் பயப்படுகிறார்கள்," என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சின்ராஜ்.

"சமூக ஊடகங்களில் தேவையில்லாமல் தவறான செய்திகள் பரவுகின்றன. அந்த செய்திகளை கண்டு மக்கள் கோழிக்கறி வாங்க அஞ்சுகின்றனர். எனவே கோழி இறைச்சி விற்பனை சமீபத்தில் குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் கோழிக் கறியின் விலை கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது," என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் கோழிக் கறியிலிருந்து கொரோனா வைரஸ் பரவுகிறது என சமூக ஊடகத்தில் பரவும் செய்திகளால் கோழிக்கறியின் விலை பாதியாகக் குறைந்துள்ளது என துறைச்சார்ந்தவர்கள் தெரிவிப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் கோழி அல்லது ஆட்டு இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது என மருத்துவர்கள் தெளிவு படுத்தியுள்ளனர்.

’முறையாக சமைத்தால் ஆபத்தில்லை’

"இது வெறும் வதந்தியே. கோழிகளில் கொரோனா வைரஸ் கிடையாது. ஆனால் இந்த கோழிகளின் இறப்பு கோரோனா வைரஸுடன் தொடர்பு படுத்தப்பட்டு தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. முறையாக சமைக்கப்பட்ட எந்த உணவும் உடல்நலத்தில் பிரச்சனையை ஏற்படுத்தாது," என்று கிழக்கு கோதாவரி மாவட்ட மருத்துவமனைகளின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரமேஷ் கிஷோர் தெரிவிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்