கொரோனா வைரஸ்: காணாமல் போன சீன பத்திரிகையாளர் 6 மாதங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (15:55 IST)
கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருவதாக செய்தி வெளியிட்ட அந்நாட்டின் பத்திரிகையாளர் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் காணாமல் போன நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டவிட்டதாக, அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

சென் கிஷி என்ற அந்த பத்திரிகையாளர் இவ்வளவு நாட்கள் எங்கிருந்தார் என தெரியவில்லை. ஆனால், அவர் “கட்டாயப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதாக” குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதுதொடர்பாக அவரது நண்பர் யு டியூபில் பதிவேற்றியுள்ள காணொளியில், சென் கிஷி நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் ஆனால், அரசின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சென் கிஷி அவரது பெற்றோருடன் கின்டோவில் இருந்ததாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

வெளியே தைரியமாக பேசும் செயற்பாட்டார்களை அடக்குவதில் சீனா பெயர் போன நாடு.

சென் கிஷி காணாமல் போன நேரத்தில், கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதாக காட்ட சீன அரசு முயற்சித்து வந்தது.

இதேபோல கொரோனா பெருந்தொற்று குறித்து பேசிய வுஹான் தொழிலதிபர் ஃபேங் பின் மற்றும் பத்திரிகையாளர் லி செஹுவா ஆகிய இருவரும் காணாமல் போன அதே நேரத்தில்தான் செக் கிஷியும் காணாமல் போனார்.

லி கடந்த ஏப்ரல் மாதம் திரும்பி வந்த நிலையில், ஃபேங் பின் எங்கிருக்கிறார் என்பது இப்போதுவரை தெரிய வரவில்லை.

சென் கிஷி குறித்த சமீபத்திய தகவல்கள்

சென்னின் நண்பரான ஷு சியோடோங், யூ டியூபில் வெளியிட்ட காணொளியில், சென் “பாதுகாப்பான இடத்தில்” இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கிஷி இன்னும் சில அமைப்புகளில் கண்காணிப்பில் இருக்கிறார். இன்னும் வீடு திரும்பவில்லை” என்றும் அந்தக் காணொளியில் சியோடோங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கிஷி இத்தனை நாட்கள், அவரது பெற்றோருடன் கிங்டோவில் இருந்ததாக பெயர் வெளியிட விரும்பாத மனித உரிமை வழக்கறிஞர் ஒருவர் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகையிடம் தெரிவித்தார்.

“பெற்றோருடன் இருக்கும் சென் கிஷி, அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யும் முடிவு இல்லை என்பதால், அவரை கண்காணிப்பது சட்டவிரோதமானது கிடையாது” என்று அவர் தெரிவித்தார்

யார் இந்த சென் கிஷி?

மனித உரிமை வழக்கறிஞராக இருந்த சென், பத்திரிகையாளராக மாறியவர். கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் நடந்த ஹாங்காங் போராட்டங்கள் குறித்து செய்தி வெளியிட்டதில் பிரபலமானார்.

ஹாங்காங்கில் இருந்து சீனா திரும்பியவுடன் சீன அதிகாரிகளின் துன்புறுத்தலுக்கு ஆளானார்.

பின்னர் 7 லட்சம் பேர் அவரை பின்தொடர்ந்து வந்த அவரது சமூக ஊடக பக்கங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இந்தாண்டு ஜனவரி மாதம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வுஹான் மாகாணத்தை குறித்து காணொளிகள் மற்றும் செய்தி சேகரிக்க அவர் அங்கு சென்றிருந்தார்.

“அங்கு என்ன நடக்கிறது என்பதை என் கேமரா வைத்து உண்மையாக ஆவணம் செய்வேன். எதையும் மறைக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன்” என அவர் பதிவிட்டிருந்த யூ டியூப் வீடியோவில் தெரிவித்திருந்தார்.

பிப்ரவரி 7ஆம் தேதி சென்னின் நண்பர் சியாடோங் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில், சென் கிஷி காணமால் போய்விட்டதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்