சீன வெள்ளம்: புரட்டிப்போடப்பட்ட நகரம் - அழிவை ஏற்படுத்திய ஒரு மணி நேர மழை -

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (00:12 IST)
சீனாவின் க்ஹெனான் மாகாணத்தில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளம், சுரங்க ரயில் பாதையில் ஓடியதால் அந்த வழியாக வந்த மெட்ரோ ரயிலுக்குள் நீர் புகுந்து 12 பேர் பலியானார்கள். அங்குள்ள சுரங்க ரயில் நிலையத்தில் இருந்து ஐநூறுக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாக ஹெனான் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
நாள்கணக்கில் பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளும் கடுமையாக சேதம் அடைந்தன. இதனால் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
 
இந்த கன மழை மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், இந்த நகரையே புரட்டிப்போட்டு விட்டது.
 
அந்த மாகாணத்தின் பல நகரங்களில் வீதிதோறும் வெள்ளம் ஆறு போல ஓடுகிறது. நீரின் வேகத்துடன் குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இடிபாடுகள் அடித்துச் செல்லப்படுகின்றன. பல இடங்களில் நடைபாதையில் சென்றவர்கள் மீட்கப்படம் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
 
சென்னைக்கு மற்றுமொரு பேராபத்து: “மீண்டும் பெருவெள்ளம் ஏற்படலாம்”
ஐரோப்பாவை புரட்டிப்போட்ட வெள்ளம்: முற்றிலும் அழிந்த ஊர்கள், 150 பேர் பலி
இதுவரை க்ஹெனான் மாகாணத்தில் 25 பேர் இறந்துள்ளதாகவும், குறைந்தபட்சம் பன்னிரண்டு நகரங்களாவது வெள்ளத்தின் கடுமையான தாக்கத்தை அனுபவித்துள்ளதாகவும் அந்த மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
சீனா
 
சீன அதிபர் ஷி ஜின்பிங், "க்ஹெனான் மாகாணத்தில் குறிப்பிடத்தக்க அளவில் உயிர் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது," என்று புதன்கிழமை கூறினார்.
 
வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு அணைகள், நீர்த்தேக்கங்கள் அவற்றின் கொள்ளளவைக் கடந்து நிரம்பி வழிகின்றன. பல இடங்களில் அணைக்கட்டுகளை உடைத்துக் கொண்டு ஊருக்குள் புகுந்த வெள்ளத்தை திருப்பி விடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.
 
அந்த மாகாணத்தில் ரயில் மற்றும் விமான போக்குரவத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.
 
சீனா
 
மாகாண தலைநகரான ஜங்ஜெள நகரில் வருடம் முழுவதும் பொழிந்திருக்க வேண்டிய மழை, வெறும் மூன்றே நாட்களில் கொட்டித்தீர்த்துள்ளது.
 
கடந்த செவ்வாய்க்கிழமை, நகருக்குள் புகாமல் இருக்க கட்டப்பட்டிருந்த தடுப்புச்சுவர்களை உடைத்துக் கொண்டு நீர் ஊருக்குள் புகுந்தது. அப்போது அந்த நகரின் சுரங்கப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த மெட்ரோ ரயிலுக்குள்ளும் நீர் புகுந்தது. கழுத்தளவுவரை உயர்ந்த நீரில் சிக்கி 12 பேர் இறந்தனர்.
 
சுரங்கப்பாதையில் இருந்த இருக்கைகள் மீது ஏறி நின்றபோதும், பலருக்கும் முழங்கால் முதல் கழுத்துப்பகுதிவரை நீர் மட்டம் உயர்ந்ததாக வெய்போ என்ற சீன சமூக ஊடக பக்கத்தில் ஒரு பெண்மணி குறிப்பிடிருந்தார்.
 
 
வெள்ளத்தில் இருந்து தப்பிக்க பல பெற்றோர் தங்களின் பிள்ளைகளை ஏந்திப்பிடித்திருந்தனர். உயிர் பிழைத்த சிலர், அந்த பிள்ளைகளை மீட்கும் நோக்கத்துடன் அவர்களை நோக்கி கையில் கிடைத்த மிதக்கும் பொருட்களை வீசினர்.
 
சுமார் அரை மணி நேரம் நீரில் இருந்த அனுபவத்தை விவரித்த ஒரு பயணி, மூச்சு விடவே முடியாத நிலையை அடைந்ததாக கூறினார்.
 
 
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணிக்கு அந்த சுரங்க நிலையத்தை மூட அரசு நிர்வாகம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அதில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டதாகவும் அந்த முயற்சியில் ஐந்து பேர் காயம் அடைந்ததால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், 12 பேர் இறந்து விட்டனர் என்று ஜங்ஜெள அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
சுரங்க நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்புக்குழுவினர் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரும் காட்சிகளை அரசு ஊடகமான சிஜிடிஎன் ஒளிபரப்பியது.
 
 
அந்த நகரில் உள்ள மருத்துவமனையில் கன மழை காரணமாக மின்சாரம் சில நிமிடங்கள் துண்டிக்கப்பட்டு பின்னர் இணைப்பு சீராக்கப்பட்டது. அந்த மருத்துவனையில் மட்டும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 600 நோயாளிகள் இருந்தனர். மின் வெட்டு காரணமாக அந்த நோயாளிகள் வேறு இடத்துக்கு அவசர, அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
 
ஜங்ஜெள நகரில் மின்சாரம், தண்ணீர், இன்டர்நெட் வசதி என எதுவும் இல்லை என்று உள்ளூர்வாசியான லியூ பிபிசி சீன மொழி சேவை நிருபரிடம் தெரிவித்தார்.
 
சீனா
 
"என் வாழ்நாளில் இப்படியொரு நிலையை அனுபவித்ததே இல்லை. மழை ஏதோ சொர்கத்தில் இருந்து பொழிந்தது போல ஒரு மணி நேரம் தான் பொழிந்தது. அதன் பிறகு எங்களைச் சுற்றி எங்கும் தண்ணீர் நிறைந்து காணப்பட்டது," என்றார் லியூ.
 
ஆனால் ஜங்ஜெள நகரைத்தாண்டி அருகே உள்ள பகுதிகளுக்கும் வெள்ள நீர் சென்றது. லுவோயாங் நகரில் உள்ள அணை அதன் 65 அடி கொள்ளளவை கடந்ததால் சேதம் அடைந்தது. அந்த அணை எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் அதன் அருகே உள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
 
ஷிஷூயி நகரில் பல குடியிருப்புவாசிகள் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க தங்களுடைய வீட்டின் மேல் கூரை பகுதியில் நின்றிருந்ததை பார்க்க முடிந்தது. "எங்களுக்கு நீந்தத் தெரியாது. ஒட்டுமொத்த கிராமமும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது," என்று அந்த ஊரைச் சேர்ந்த நபர் கூறியிருக்கிறார்.
 
வெள்ளப்பெருக்கு என்ன காரணம்?
 
கடந்த சனிக்கிழமை முதல் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் மழை வெள்ளம் கடுமையாக இருக்கும் என்று சீன வானிலை ஆய்வகம் எச்சரித்திருந்தது.
 
ஷென்சோ நகரில் செவ்வாய்க்கிழமை 624 மி.மீ மழை பொழிவு பதிவாகியுள்ளது. இதில் நான்கில் மூன்று பங்கு மழை ஒரு மணி நேரத்தில் கொட்டித்தீர்த்தது.
 
இந்த நகரில் மேலும் சில பகுதிகளில் சூறாவளி கடுமையாக இருக்கும் என்றும் வியாழக்கிழமையும் கன மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது.
 
சீனா
பருவநிலை மாற்றமும், புவி வெப்பமடைவதும் தற்போதைய மழை பொழிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த பிராந்தியத்தில் மேலும் தீவிர மழை பொழியலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
 
சீனாவின் மஞ்சள் ஆற்றின் ஒரு பகுதியை கொண்டுள்ள க்ஹெனான் மாகாணம், பல்வேறு முக்கிய நதிகளைக் கொண்டுள்ளதால் அந்த மாகாணம் வெள்ளப்பேரிடரை எதிர்கொள்ளும் பகுதியாகவே கருதப்படுகிறது.
 
இங்குள்ள ஒரு கோடியே இருபது லட்சம் பேர் வாழும் ஷென்சோ நகரம், மஞ்சள் ஆற்றுப்படுகையையொட்டிய பகுதியில் உள்ளது. அங்கு விரிவான அணை கட்டுமானத்தால் இதுபோன்ற இடர்பாடு நேரலாம் என அறிவியாளளர்கள் முன்பே எச்சரித்ததாகக் கூறுகிறார், பிபிசி சீன செய்தியாளர் ஸ்டீஃபென் மெக்டோனெல்.
 
தற்போதை மழை மற்றும் வெள்ளம் காரணமாக, ஆறு மற்றும் குளங்களை இணைக்கும் நீர் வழி தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இந்த பிராந்தியத்தில் கோடை மழையை உள்வாங்கிக் கொள்ளும் வடிகாலாக இதுநாள் வரை விளங்கி வந்தன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்