சீனா-தைவான் சிக்கல்: 100 கோடி தைவான் டாலர் செலவில் 3 லட்சம் பேர் கொண்ட படையை உருவாக்குவதாக அறிவித்த தொழிலதிபர்

வியாழன், 13 அக்டோபர் 2022 (17:06 IST)
தைவானின் தைபேயில் முடி நரைத்த, கண்ணாடி அணிந்த ஒரு வயோதிகத் தொழிலதிபர், தொழில்நுட்ப நிறுவனப் பெருமுதலாளி ஒருவர், கடந்த செப்டம்பர் மாதம் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து, தான் மக்கள் ராணுவம் ஒன்றைக் கட்டமைக்க சுமார் 100 கோடி தைவான் டாலர்கள் அளிப்பதாக உறுதியளித்தார்.


குண்டு துளைக்காத உடை அணிந்திருந்த ராபர்ட் ட்சோ என்ற அவர், தன் நாட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் சீனாவுக்கு எதிராக சண்டையிட தான் உதவ விரும்புவதாக அறிவித்தார்.

இன்னும் மூன்று ஆண்டுகளில் சுமார் மூன்று லட்சம் படையினர் கொண்ட ராணுவத்தை அமைத்துப் பயிற்சியளிப்பது, அதாவது மக்கள் தொகையில் ஏழில் ஒருவரை இந்தப் படையில் சேர்ப்பதே அவரது இலக்கு. இதன்மூலம், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள், கடை வைத்திருப்பவர்கள், பெற்றோர்கள் என எல்லோரும் துப்பாக்கிப் பயிற்சி பெற முடியும். துப்பாக்கி சுடுவதில் பயிற்சி பெற்ற 3 லட்சம் பேர் அவருக்குத் தேவை.

இந்த பணி லட்சிய நோக்குடையது என்று கூறும் அவர், இது செய்து முடிக்கப்படும் என்றும் உறுதியளிக்கிறார்.

சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை துறந்த பிறகு, மீண்டும் விண்ணப்பித்து பெற்ற புதிய தைவான் அடையாள அட்டையின் புகைப்படத்தை அவர் காண்பித்தார். தான் எங்கும் ஓடவில்லை என கூறிய அவர், தான் பயப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

"தைவானில் இருக்கும்வரை மக்கள் தங்கள் நாட்டை காக்க தயாராக இருப்பார்கள். சீன ராணுவத்தின் அச்சுறுத்தலுக்கு அவர்கள் பயப்படவில்லை," என ஊடக சந்திப்புக்குப் பின் சில வாரங்கள் கழித்து பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

யார் இந்த ராபர்ட் ட்சோ?

சீனாவில் பிறந்து தைவானில் வளர்ந்த ராபர்ட் ட்சோ, யுனைடெட் மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் கார்ப் என்ற குறைக்கடத்தி (செமி கண்டக்டர்) தொழிற்சாலையை உருவாக்கினார். தற்போது, இத்தொழிலுக்கு தைவான் உலகளவில் அறியப்பட்ட ஒன்றாக உள்ளது.

ஒரு தொழிலதிபராக சீனாவில் பல்வேறு தொழில் ஒப்பந்தங்களை அவர் செய்துகொண்டுள்ளார். வரலாற்றில் மிகுந்த ஆர்வமுள்ளவரான இவரின் குரல், பல தசாப்தங்களாக கொள்கை சார்ந்த விவாதங்களில் வலுவாக ஒலித்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு சீனாவுடன் ஒன்றிணைவது குறித்த வாக்கெடுப்புக்கு வலியுறுத்தினார்.

ஆனால், இப்போது படையெடுப்புக்குத் தயாராக வேண்டும் என்று உணரும் தைவானிய மக்களுள் இவரும் ஒருவராக உள்ளார்.

மூன்றாவது முறையாக சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் தற்போதைய சீன அதிபர் ஷி ஜின்பிங். கம்யூனிஸ்ட் புரட்சிக்குப் பிறகு சீனாவின் முதல் தலைவரான மா சே துங்-க்குப் பிறகு இப்படி மூன்றாவது முறையாக தலைவர் பதவிக்கு வரப்போகிறவர் ஷி ஜின்பிங் தான். தைவான் - சீன இணைப்பு பற்றி ஷி பேசி வருவது நடந்தால் அது அவருக்கு மிகப்பெரிய அடைவாக இருக்கும்.

அவருடைய ஒரு தசாப்த ஆட்சியில் சீன ராணுவம் அதிக அளவில் நவீனப்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சீனா - தைவான் இடையே உள்ள 160 கி.மீ நீள தைவான் நீரிணையை ஒட்டி சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் தன் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.

பல தசாப்தங்களாக சீன ராணுவ அச்சுறுத்தலுக்குப் பழக்கப்பட்ட தைவான் மக்களை இது பெரிதாக அசைக்கவில்லை.

ஆனால், 2019ல் ஹாங்காங் மீதான சீனாவின் ஒடுக்குமுறை அதனை சிதறடித்தது. தைவான் சீனாவுடன் இணைந்தால் எப்படி இருக்கும் என்பதற்கும், ஜனநாயகத்தை தக்கவைத்துக்கொள்ளும் "ஒரு நாடு, இரண்டு கொள்கை" எப்படி செயல்படும் என்பதற்கும் ஹாங்காங் ஒரு மாதிரியாகக் காட்டப்படுகிறது.

இந்த ஆண்டு மற்றொரு எச்சரிக்கை வழங்கும் ஆண்டு என்கிறார் ட்சோ. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தைவானில் எதிரொலித்தது.

ஆகஸ்ட் மாதம், தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி சென்றது பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு சீனா - தைவான் இடையேயான பதற்றம் உச்ச நிலைக்கு சென்றது.

சீனா அதற்கு பலமான போர் பயிற்சிகள் மூலம் பதிலடி தந்தது. அச்சுறுத்துவதற்காக மட்டும் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. தைவானை எப்படி சீனா தாக்கும் என்பதற்கான ஒத்திகையாகவும் அது இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு வாரமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள், 10 போர்க்கப்பல்கள் உள்ளிட்டவை தைவானைச் சுற்றி இயக்கப்பட்டன. மேலும் சீனா நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானம் தாங்கி கப்பல்களையும் அனுப்பியது, டஜன் கணக்கில் ஏவுகணைகளையும் வீசியது.

இதுதான் ட்சோவுக்கு மாற்றத்திற்கான புள்ளியாக இருந்தது. ஆளும் சீன கம்யூனிச கட்சி, "ஒரு மாஃபியா, குற்ற அமைப்பு, தேசிய அரசாங்கமாக மாறுவேடமிட்டுள்ளது" என அவர் எண்ணத் தொடங்கினார்.

"என்னுடைய உறுதிப்பாட்டை வெளிப்படுத்த நான் விரும்புகிறேன். அதனை மக்கள் மற்றும் மற்ற தொழிலதிபர்கள், தலைவர்கள் பின்பற்ற நான் ஊக்கமாக இருப்பேன் என நினைக்கிறேன்," என அவர் தெரிவித்தார்.

தைவானின் "எதிர்த்தாக்குதல்" யுக்திக்கு முக்கியமானதாக கருதப்படும் ராணுவ ட்ரோன்களுக்கும் செலவிட அவர் உறுதிதெரிவித்துள்ளார்.

தனது மொத்த உள்நாட்டு உற்பத்தில் 2 சதவீதத்தை நாட்டின் பாதுகாப்புக்காக செலவிடுகிறது தைவான். 2010ம் ஆண்டிலிருந்து 23 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டுக்கு அமெரிக்ககா ஆயுதங்களை அந்நாட்டுக்கு விற்றுள்ளது, இதில் 2020ம் ஆண்டிலிருந்து மட்டும் 6 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை விற்றுள்ளது அமெரிக்கா. ஆனால், சீனா இதனைவிட குறைந்தது 15 மடங்கு அதிகமாக பாதுகாப்புக்காக செலவிடுகிறது. உலகின் மிகப்பெரிய கடற்படையை கொண்டுள்ளது சீனா. மேலும் அந்நாட்டு ராணுவத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் சம்பளம் பெறும் வீரர்களாகவும் மேலும் 5 லட்சம் பேர் கையிருப்பிலும் உள்ளனர்.

எனவே, தைவான் வழக்கத்திற்கு மாறான உத்திகளில் கவனம் செலுத்துகிறது.

"யுக்ரேனில் நாம் காண்பது போன்று இப்போது நாம் போரில் சண்டையிடுவது என்பது, போர்வீரர்களின் எண்ணிக்கையையோ அல்லது டேங்குகளின் எண்ணிக்கையை பொறுத்தோ அல்ல. இது அறிவாற்றலால் தீர்மானிக்கப்பட்ட போர்," என்கிறார் ட்சோ.

எதிர்த்து தாக்கும் திறன் மற்றும் போராடுவதற்கான விருப்பம் இவையே இதற்கு தேவை. தைவான் ராணுவம் 1990களில் இருந்து சுருங்கத் தொடங்கியது. மேலும், தைவான் அரசாங்கம் பல ஆண்டுகளாக கட்டாய சேவைகளை இரண்டு ஆண்டுகளில் இருந்து நான்கு மாதங்களாக குறைத்துள்ளது. இப்போது அதனை விரிவுபடுத்துவதற்கான விவாதம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல தசாப்தங்களில் முதன்முறையாக பெரும்பாலானோர் இதற்கு ஆதரவாக இருப்பதை கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

பெலோசியின் வருகைக்குப் பின்னர், 2021ம் ஆண்டில் அமைக்கப்பட்ட குடிமக்கள் பாதுகாப்பு பயிற்சிக் குழுவான குமா அகாடமி என்ற குழுவை கண்டுபிடித்தார் ட்சோ. அதனை விரிவுபடுத்த ட்சோ உறுதிகொண்டுள்ளார்.

"ட்சோ தனியொருவர் அல்ல. அவர் இந்த சமூகத்தின், நாங்கள் இப்போது எங்கு இருக்கிறோம் என்பதை பிரதிபலிக்கும் கண்ணாடி அவர் என நான் கூற விரும்புகிறேன்," என்கிறார், தைவான் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற பாதுகாப்பு குழுவின் தலைவருமான வாங் டிங்-யு.

தைவான் மக்கள் கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளனர். உள்நாட்டில் கடுமையான துப்பாக்கிச் சட்டங்கள் இருப்பதால், உண்மையான துப்பாக்கிகளைச் சுடுவதைப் பயிற்சி செய்வதற்காக மக்கள் அமெரிக்கப் பகுதியான குவாமுக்கு விமானத்தில் ஆர்வத்துடன் செல்கின்றனர்.

"இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர்"

"இது மிகவும் "சிறந்த தொழிலாக" உள்ளது", என்கிறார் வாங். "குறிப்பாக இளைய தலைமுறை மத்தியில் அவ்வாறு உள்ளது. நம் நாட்டை எவ்வாறு பாதுகாப்பது என்பதை கற்க அவர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்" என்றார் அவர்.

தன்னை தேசபக்தர் என அடையாளப்படுத்திக்கொள்ளும் 27 வயதான கிளேர் லீ, தான் தன் நாட்டை பாதுகாப்பேன் என தெரிவிக்கிறார். ஆனால் சீனாவின் அச்சுறுத்தலை நெருங்கி வரும் ஒன்றாக கருதாத அவர், ட்சோவின் பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

"அவருக்கு (ட்சோ) தைரியம் இருப்பதாக அனைவரும் அதிசயிக்கிறோம். யாராவது இதனை செய்வார்கள், பணம் கொடுப்பார்கள் என்பதை நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. தைவானில் உள்ள பணக்கார மற்றும் அதிகாரமிக்க பலர், சீனாவுக்கும் தொழில்களுக்கும் ஆதரவாகவே உள்ளனர்," என அவர் தெரிவித்தார்.

"எல்லோரும் இதுகுறித்து பேசுகின்றனர். ஆனால், அதனை செய்யப்போவதாக யாரும் கூறி நான் கேட்டதில்லை. நானும் இதனை செய்வேன் என நினைக்கவில்லை," என்கிறார் அவர்.

"உங்கள் முகத்தை நோக்கி துப்பாக்கி நீட்டப்படும்வரை" மக்கள் அதன் தீவிரம் குறித்து சிந்திக்க விரும்பவில்லை, என்கிறார் கிளேர் லீ.

"நாங்கள் சண்டையிட விரும்பவில்லை, [சீனாவுடன்] ஒன்றிணைவதை விரும்பவில்லை அல்லது சுதந்திரமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என பெரும்பாலானோர் கருதுகிறோம். எங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கே நாங்கள் விரும்புகிறோம்," என்றார் அவர்.

ஆனால், எதிர்பார்த்ததை விட இந்த விவகாரம் மிக விரைவாக மாறிவிட்டதாக அவர் ஒப்புக்கொள்கிறார். இப்போது அவருடைய காலத்திலேயே, போர் மூலமாக தைவான் சூழல் தீர்க்கப்படும் என்பதை "உறுதியாக நம்புகிறார்".

இது குறித்த அமெரிக்காவின் கொள்கை தெளிவற்று இருக்கும்போதிலும், சீன தாக்குதலுக்கு எதிராக காத்துக்கொள்ள அமெரிக்க படைகள் தைவானுக்கு உதவும் என, இரு முறை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆனால், தங்களை காத்துக்கொள்ள தைவான் மக்கள் முன்வர வேண்டும் என, ட்சோ கூறுகிறார்.

"தைவான் மக்கள் தங்கள் மீது நம்பிக்கை கொள்வதற்காகவே இதுகுறித்த என்னுடைய செயல்பாடுகள் உள்ளன" என அவர் கூறினார். "சீன மொழியில் இதனை 'பாவ் ஜுவான் யின் யு' என கூறுவேன்" என்கிறார்.

'பாவ் ஜுவான் யின் யு' என்பது ஒரு பழமொழி. இதனை அப்படியே மொழிபெயர்த்தால், "பச்சை மாணிக்கக் கல்லை ஈர்க்க செங்கல்லை எறியுங்கள்" என்பதாகும்.

போர் பயிற்சிக்கு அவர் பணம் வழங்குவதை செங்கல்லாக பார்க்கிறார் ட்சோ. அதற்கு பதிலாக கிடைக்கப் போகும் மாணிக்கக் கல்லாக, தைவானிய மக்களின் போராட்ட திறனை குறிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்