106 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஜனவரியில் பொழிந்த கனமழை

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (14:41 IST)
கடந்த 106 ஆண்டுகளுக்கு பின்னர், ஜனவரி மாதத்தில் சென்னை நகரத்தில் பலத்த மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
குளிர்கால மாதமான ஜனவரி முதல் வாரத்தில், சென்னையில் பெய்த கனமழை, சராசரியை விட 3,000 சதவீதத்திற்கும் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
நூறு ஆண்டுகளுக்கும் மேலான வானிலை மாற்றம் குறித்த பதிவுகளை சென்னை வானிலை ஆய்வு மையம் ஆவணப்படுத்தியுள்ளது. அந்த பதிவுகளை கொண்டு பார்க்கையில், 2021 ஜனவரி முதல் வாரத்தில் பெய்துள்ள மழை மிகவும் அரிதாக நடந்த நிகழ்வாக கருதப்படுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
 
இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன், வழக்கத்திற்கு மாறாக ஜனவரி மாதத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பதிவாகியுள்ளது என்கிறார்.
 
''ஜனவரி மாதம் பொதுவாக வறண்ட வானிலை காணப்படும். தமிழகத்தில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை தென்மேற்கு பருவ மழையும், அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை வடகிழக்கு பருவ மழை காலமும் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை ஜனவரியில் தொடர்கிறது என்பதைதான் இந்த அதீத மழைப்பொழிவு உணர்த்துகிறது. கடந்த ஒரு வாரத்தில் பெய்த மழை அளவை ஒப்பிட்டு பார்த்தோம். 
 
1915இல் சென்னை நகரத்தில் ஜனவரி மாதத்தில் 21.7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தற்போது, 106 ஆண்டுகளுக்கு பின்னர், ஜனவரி மாதத்தில், சென்னை நகரத்தில், ஜனவரி மாதத்தில் இதுவரை 16.6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதாவது இயல்பான சதவீதத்தை விட சென்னையில் 3,318 சதவீதம் அதிக மழை ஜனவரியில் பெய்துள்ளது,'' என்கிறார் புவியரசன்.
 
அதீத மழை பொழிவுக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் தொடர்பு உள்ளதா என்று கேட்டபோது, ''இந்த ஆண்டு ஜனவரியில் பதிவாகியுள்ள மழை அரிதாக பெய்துள்ளது என்றே கணக்கிடவேண்டும். இதனை பருவ நிலை மாற்றம் என உடனே சொல்லிவிடமுடியாது. 
 
இந்த ஆண்டு பெய்ததை போலவே அடுத்த ஆண்டும், அல்லது ஒரு சில ஆண்டுகள் தொடர்ந்தும் இந்த மாற்றம் பதிவாகினால்தான் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று சொல்லமுடியும். தற்போது ஜனவரி முதல் வாரத்தில் மழை பெய்துள்ள நிகழ்வு அரிதான நிகழ்வு மட்டுமே,'' என்கிறார் புவியரசன்.
 
ஜனவரி 6 மற்றும் 7ம் தேதிகளில் தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
 
சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த இரண்டு நாட்களும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்துகிறார் புவியரசன். ஜனவரி மாதம் 10ம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்