"சூரரைப் போற்று" - கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் ஏர் டெக்கான் நிறுவனத்திற்கு முன்பும் பின்பும் செய்த சாதனைகள்

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (23:55 IST)
சூர்யா நாயகனாக நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அமெஸான் ப்ரைமில் வெளியாகிறது. ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனரான கேப்டன் கோபிநாத்தின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட படம்தான் இது.
 
இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் விமானப் பயணங்களை வழங்கிய ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனராகத்தான் கேப்டன் கோபிநாத்தை பலரும் அறிவார்கள். ஆனால், ஏர் டெக்கான் நிறுவனத்திற்கு முன்பும் பின்பும் கேப்டன் கோபிநாத் செய்த சாதனைகளும் சாகசங்களும் மகத்தானவை.
 
அவர் இந்தக் கதைகளை சில ஆண்டுகளுக்கு முன்பாக Simply Fly: A Deccon Odyssey என்ற பெயரில் சுயசரிதையாகவே எழுதிவிட்டார். இந்தப் புத்தகத்தை தமிழிலும் வானமே எல்லை என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் ஹசன் மாவட்டத்தில் உள்ள கொரூர் என்ற சிறிய கிராமத்தில் ஒரு மத்தியதர குடும்பத்தில் பிறந்த கோபிநாத், துவக்கக் கல்வியை வீட்டிலேயேதான் பெற்றார். பிறகு நேரடியாக பள்ளிக்கூடத்தில் 5ஆம் வகுப்பில் சேர்ந்தார்.
 
அங்கு படித்துக்கொண்டிருந்தபோது, சைனிக் பள்ளியில் சேர்வதற்கு தேர்வெழுதி, அதில் வெற்றிபெற்றார் கோபிநாத். அப்போது அவருக்கு வயது வெறும் 11தான். இந்த முதல் வெற்றிதான் அவரது வாழ்க்கையில் எல்லாவற்றையும் மாற்றியது என்று சொல்லலாம். சைனிக் பள்ளியில் இருந்து நேஷனல் டிஃபன்ஸ் அகாடெமி, அங்கிருந்து இந்திய ராணுவம் என அடுத்தடுத்த கட்டங்களுக்குப் பறந்தார் கோபிநாத்.
 
கோபிநாத் ராணுவத்தில் கேட்பனாகப் பணியாற்றும்போதுதான், 1971ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கிழக்கு பாகிஸ்தான் தொடர்பாக யுத்தம் மூண்டது. இந்த யுத்தத்தில் முன்னணி அதிகாரியாக செயல்பட்ட அனுபவமும் கோபிநாத்துக்கு இருக்கிறது. 
 
ஆனால், யுத்தத்திற்குப் பிறகு தான் வாழ்வைத் தொடர்ந்து ராணுவத்திலேயே கழிக்க கோபிநாத் விரும்பவில்லை. 28 வயதிலேயே ராணுவ வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்குத் திரும்பிவிட்டார். 
 
அதற்குப் பிறகு ஊரிலேயே விவசாயப் பண்ணையை அமைத்த அவர், அதிலும் பல புதுமைகளை முயன்றார். விஷயங்களை விறுவிறுவெனச் செய்து முடிப்பதுதான் கேப்டனின் பாணி. ஒரு முறை அவரது என்ஃபீல்ட் பைக் ரிப்பேராகிவிட்டது. ஹஸனிலிருந்த ஷோருமுக்கு எடுத்துச் சென்றால், அப்போதுதான் அவர்களது டீலர்ஷிப் ரத்துசெய்யப்பட்டிருந்தது. 
 
நாம் ஏன் இந்த டீலர்ஷிப்பை எடுத்துச் செய்யக்கூடாது என்று தோன்றவே, இரண்டே நாட்களில் என்ஃபீல்ட் டீலர்ஷிப் அவர் கைகளில் இருந்தது. இந்த அதிரடி பாணி அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தபடியே இருந்தது. 
 
திடீரென பா.ஜ.கவில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். ஆனால், மனம் தளராமல் அடுத்தடுத்து முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தார் கோபிநாத். 
 
ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகு நரசிம்மராவ் இந்தியப் பிரதமராக  இருந்த காலகட்டம். நாம் ஏன் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தை ஆரம்பிக்கக்கூடாது என நினைக்கிறார் கோபிநாத். அப்போது அவ்வளவு பெரிய நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கான முதலீடு ஏதும் அவரிடம் இல்லை. 
 
இருந்தபோதும் முயற்சிகளைத் துவங்குகிறார் அவர். அது ஒரு இமாலயப் பணியாக அமைகிறது. குறிப்பாக, அரசின் ஒவ்வொரு துறைகளிடமும் அனுமதி வாங்குவதென்பது ஒரு சாகசக் கதையாகவே இருக்கிறது. 
 
லக்ஷ்மி: லவ் ஜிஹாத், இந்து கடவுள் இழிவு சர்ச்சையில் அக்‌ஷய் குமார் படம் - தற்போதைய நிலை என்ன?
 
முழுமையான அனுமதி கிடைப்பதற்கு முன்பாகவே, நிறுவனத்தின் துவக்கவிழாவை அறிவித்து, அந்தக் கெடுவுக்குள் அனுமதியைப் பெறும் வித்தை கோபிநாத்திற்கு மட்டுமே உரியது. புத்தகத்தின் இந்தப் பகுதி ஒரு துப்பறியும் நாவலைவிட சுவாரஸ்யமானது.
 
ஒரே ஒரு ஹெலிகாப்டருடன் துவங்குகிறது டெக்கான் ஏவியேஷன். பிறகு படிப்படியாக ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சில விபத்துகள் நடக்கின்றன. இருந்தபோதும் ஹெலிகாப்டர்களை வாடகைக்குவிடுவதில் இந்தியாவிலேயே முன்னணி நிறுவனமாகிறது டெக்கான்.
 
இதற்குப் பிறகுதான் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்குவதற்கான ஏர் டெக்கானை துவங்க முடிவுசெய்கிறார் கோபிநாத். விமான நிறுவனங்கள் அதன் உரிமையாளர்களை லட்சாதிபதிகளாக்கிவிடும் என்பார்கள், அதாவது கோடீஸ்வரர்களிலிருந்து லட்சாதிபதியாக்கிவடும்.
 
ஆகவே, விமானத் தொழிலில் எதெல்லாம் செலவுபிடிக்கும் அம்சம் என ஆராய்கிறது, அவற்றையெல்லாம் குறைத்து, மிகக் குறைந்த செலவில் ஒரு விமான நிறுவனத்தைத் திட்டமிடுகிறார். எதெல்லாம் பிற விமான நிறுவனங்களுக்கு செலவாக இருக்கிறதோ, அதெல்லாம் ஏர் டெக்கானுக்கு வருமானம் தரும் விஷயமாக மாற்றியமைக்கிறார்.
 
ஆனால், துவக்க நாளிலேயே முதல் விமானமே எஞ்சினில் தீப்பிடித்துவிடுகிறது. பத்திரிகைகளில் பெரிய அளவில் எதிர்மறை செய்திகள். இருந்தபோதும் தொடர்ந்த முயற்சிகள், கடுமையான திட்டமிடல் காரணமாக, இந்தியாவின் மிகக் குறைந்த கட்டணமுள்ள ஏர்லைனாக வெற்றிகரமாக செயல்பட ஆரம்பிக்கிறது ஏர் டெக்கான்.
 
பட மூலாதாரம்,AMAZON
ஆனால், கோபிநாத் தனது கனவுகளை தொடர்ந்து விரிவுபடுத்துகிறார். முதலீடுகளைத் தேடுகிறார். இந்தத் தருணத்தில்தான் ஏர் டெக்கானில் பெரும் முதலீடு செய்கிறார் விஜய் மல்லய்யா. ஒரு கட்டத்தில் ஏர் டெக்கானின் கட்டுப்பாடு மல்லைய்யா வசம் சென்றுவிடுகிறது. ஏர் டெக்கான் என்ற பெயரும் மாற்றப்பட்டுவிடுகிறது. இதற்குப் பிறகு, அந்த நிறுவனத்திலிருந்தே தன் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறுகிறார் கேப்டன்.
 
ஆனால், அதற்கு முன்பே சரக்கு விமான நிறுவனம் ஒன்றுக்குத் திட்டமிடுகிறார் கோபிநாத். இந்தியாவில் சரக்குப் போக்குவரத்தில் இருக்கும் சிரமங்கள், வாய்ப்புகளை மனதில்கொண்டு பெரிய சரக்கு விமானங்களை இயக்கத் திட்டமிடுகிறார் அவர். 
 
கோபிநாத் படும் சிரமங்களைப் பார்த்த விஜய் மல்லையா ஒருகட்டத்தில், "கேப்டன் ஏன் இப்படி சிரமப்படுகிறீர்கள்? பேசாமல் கிராமத்திற்குப் போய் விவசாயம் செய்ய வேண்டியதுதானே" என்கிறார். அதற்கு கோபிநாத், "இது எம்.எஸ். சுப்புலட்சுமியைப் பாடாதே என்று சொல்வதைப் போல இருக்கிறது" என பதிலளித்தார்.
 
பட மூலாதாரம்,MINT / GETTY IMAGES
தன் சுயசரிதையின் இறுதியில், தன்னைப் பற்றிச் சொல்ல ஆல்ஃப்ரட் டென்னிஸனின் கவிதையை மேற்கோள் காட்டி முடிக்கிறார். அது உண்மையிலேயே பொருத்தமாகவும் இருக்கிறது.
 
"பயணத்தில் இருந்த நான் ஓய்வுபெற முடியாது
 
வாழ்க்கையை கடைசி சொட்டுவரை பருகுவேன்
 
தேடல்.. தாகம்.. கண்டடைதல்.. விட்டுக்கொடுக்காமை 
 
அதுவே நான்.
 
என் பயணம் முடிவுறாது".
 
கேப்டன் கோபிநாத்தின் கதையில் உள்ள சாகசங்களில் பாதி, சூரரைப் போற்றுவில் இருந்தலே படத்தில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்