கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்திருக்கின்றனர். இவர்களை உயிரோடு மீட்பதில் கடந்த கால அனுபவங்கள் சொல்வது என்ன? அந்த மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?
கடந்த பத்தாண்டுகளில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்தவர்களில் 4 குழந்தைகள் சடலமாகவே மீட்கப்பட்டனர். மேலும் நான்கு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 3 குழந்தைகள் மட்டுமே, மீட்கப்பட்டு உயிர் தப்பினர்.
இந்த வரிசையில் மீட்புப்பணி தோல்வியடைந்து, உயிரிழந்தோர் பட்டியலில் சுஜித் வில்சனும் சேர்ந்துள்ளார்.
இதில் உயிர் பிழைத்த குழந்தைகளில் ஒரு குழந்தை ஐம்பதடி ஆழத்திலும் மற்றொரு குழந்தை 18 ஆழமுள்ள கிணற்றிலும் விழுந்து மீட்கப்பட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதியன்று திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள குத்தாலப்பேரியில் 3 வயதுச் சிறுவன் ஹர்ஷன் 18 அடி ஆழமுள்ள குழியில் தவறி விழுந்தான். ஆறு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவன் மீட்கப்பட்டான்.
கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதியன்று நாகப்பட்டின் மாவட்டம் புதுப்பள்ளி என்ற இடத்தில் வசித்துவந்த கார்த்திகேயன் என்பவரது மகள் திவ்யதர்ஷினி தனது வீட்டின் பின்புறம் தோண்டப்பட்டிருந்த 18 ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தாள். உடனடியாக, தலைஞாயிறு மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இடங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு அருகிலேயே மற்றொரு பள்ளத்தைத் தோண்டி, மிகக் குறுகிய கால அளவிலேயே குழந்தையை மீட்டனர்.
மேலே சொன்ன இரண்டு சம்பவங்களிலும் வெவ்வேறு விதங்களில் குழந்தைகள் மீட்கப்பட்டனர். முதல் சம்பவத்தில் கை போன்ற கருவியை உள்ளே செலுத்தி குழந்தை மேலே இழுக்கப்பட்டது. நாகப்பட்டினம் சம்பவத்தில் குழந்தை விழுந்த குழிக்கு அருகிலேயே மற்றொரு குழி தோண்டப்பட்டு குழந்தை மீட்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டில் குத்தாலப்பேரியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஹர்ஷனை தான் கண்டுபிடித்த கருவியின் மூலம் மீட்டவர் மணிகண்டன்.
"ஆழ்துளைக் குழாய்களில் விழுந்த குழந்தைகளை மீட்பதில் ஆரம்ப கட்ட நேரம் மிக முக்கியமானது. குத்தாலப்பேரியில் குழந்தை காலை ஏழே கால் மணிக்கு குழிக்குள் விழுந்தது. நான் ஒரு மணிவாக்கில் அங்கே சென்றுவிட்டேன். குழந்தை 20 அடி ஆழத்தில் சிக்கியிருந்தது. உடனடியாக பணிகளைத் துவங்கினோம்" என நினைவுகூர்கிறார் மணிகண்டன்.
ஹர்ஷன் விழுந்திருந்த குழாயின் விட்டம் 8 அங்குலமாக இருந்தது. அதனால், மீட்பது சற்று எளிதாகவும் இருந்தது. உடனடியாக கம்பிகளை செலுத்தி, குழந்தை மேலும் கீழே செல்லாமல் தடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு, தான் கொண்டு சென்ற கைபோன்ற கருவியை உள்ளே செலுத்தி குழந்தை மேலே தூக்கப்பட்டது.
நாகப்பட்டினம் புதுப்பள்ளியில் குழியில் விழுந்த குழந்தை தீயணைப்புப் படையினரால் மீட்கப்பட்டது. அந்தப் பணியில் ஈடுபட்டு குழந்தையை குழியிலிருந்து தூக்கிய தீயணைப்புப் படை வீரரான ராஜா, அந்தப் பணியிலிருந்த சவால்களை விளக்கினார்.
குழந்தை விழுந்திருந்த ஆழ்துளைக் கிணறு 25 ஆழத்திற்குத் தோண்டப்பட்டிருந்தது. குழாயின் விட்டம் 5 ஆங்குலமாக இருந்தது.
"குழந்தை குழியில் விழுந்தது என்ற தகவல் அளிக்கப்பட்டவுடனேயே 108க்கு சொல்லி, ஆம்புலன்சும் ஆக்ஸிஜனும் அனுப்பப்பட்டது. நாங்கள் 20 நிமிடத்தில் அங்கே சென்றுவிட்டோம். குழந்தை திவ்யதர்ஷினி 18 அடி ஆழத்தில் சிக்கியிருந்தாள். மேலே தோண்டியே மீட்டுவிடலாம் என்று நினைத்து தோண்ட ஆரம்பித்தோம். ஆனால் குழிக்குள் மண் விழ ஆரம்பித்தது. அதனால், அந்தப் பணியை நிறுத்தினோம்" என்கிறார் ராஜா.
அதற்கடுத்து, அந்த ஆழ்துளைக் குழாய்க்கு அருகிலேயே ஜேசிபி மூலம் குழியைத் தோண்ட முடிவுசெய்யப்பட்டது. ஆழ்துளைக் கிணறுக்கு மூன்று அடி தூரம் தள்ளி தோண்டப்பட்டது. சுமார் 20 அடி ஆழத்திற்குத் தோண்டப்பட்டது.
இதற்குப் பிறகு பக்கவாட்டில் பாதை அமைக்கப்பட்டு, குழந்தை மீட்கப்பட்டது. இந்தப் பணியில் 14 வீரர்கள் மட்டுமே ஈடுபட்டனர். மொத்த மீட்புப் பணிகளும் இரண்டு மணி நேரத்தில் முடிவடைந்தது.
"பொதுவாக ஒரு குழந்தை உள்ளே விழுந்தது தெரிந்ததுமே தாங்களாக முயலாமல், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். அப்போதுதான் ஆரம்பகட்டத்தில், குழந்தை மேலே இருக்கும்பட்சத்தில் எளிதில் மீட்க முடியும்" என்கிறார் ராஜா.
இம்மாதிரி குழுந்தைகள் ஆழ்துளைக் கிணறுக்குள் விழும் சம்பவங்களில் முதல் சவால், குழந்தைகள் மேலும் மேலும் கீழே சென்றுகொண்டே இருப்பது. இதைத் தடுக்க "சில கம்பிகளை குழந்தைக்கும் குழிக்கும் இடையில் மெதுவாக நுழைத்து, குழந்தை மேலும் மேலும் கீழே இறங்குவதைத் தடுக்க வேண்டும்" என்கிறார் மணிகண்டன்.
இதற்குப் பிறகு, எந்த முறையில் குழந்தையை மீட்பது என்பதை முடிவுசெய்ய வேண்டும். இதுவரை தமிழகத்தில் இரண்டு, மூன்று முறைகளே திரும்பத் திரும்ப கையாளப்பட்டுவந்திருக்கின்றன.
முதலாவதாக, பக்கவாட்டில் குழிதோண்டி குழந்தையை மீட்பது. இரண்டாவதாக மணிகண்டன் போன்றவர்கள் கண்டுபிடித்த கைபோன்ற அமைப்பின் மூலம் குழந்தையை மேலே தூக்குவது. மூன்றாவது, கயிறு மூலம் குழந்தைகளின் பாகங்களைக் கட்டித் தூக்குவது. ஆனால், இந்த எல்லா முறைகளுமே தோல்வியடையும் தருணங்களும் உண்டு. குறிப்பாக தற்போது நடுக்காட்டுப் பட்டியில் நடந்துள்ள விபத்தில் மணிகண்டனின் கருவி, கயிற்றைக் கட்டித் தூக்கும் முறை ஆகியவற்றில் பலன் கிடைக்கவில்லை.
"என்னுடைய கருவியால் தூக்க முடியாததற்குக் காரணம், ஆழ்துளைக் கிணற்றின் விட்டத்தைவிட எனது கருவியின் விட்டம் அதிகமாக இருந்தது. குழாயின் விட்டம் ஐந்து அங்குலம் என்றால், எனது கருவியின் விட்டம் ஆறு அங்குலமாக இருந்தது. இந்த சமீபத்திய சம்பவத்திலிருந்து பல பாடங்கள் எனக்குக் கிடைத்தன" என்கிறார் மணிகண்டன்.
அதில் ஒன்று, எல்லா துளைகளுக்கும் பொருந்தக்கூடிய அல்லது வெவ்வேறு அளவிலான கருவிகளை உருவாக்குவது. "இதற்கு செலவாகும். அரசுதான் முதலீடு செய்து இந்தக் கருவிகளை உருவாக்க வேண்டும்" என்கிறார் மணிகண்டன்.
தவிர, இந்த ஆழ்துளைக் கிணறு சம்பவங்கள் அனைத்திலுமே பக்கத்தில் குழி தோண்ட ஆரம்பித்தவுடனேயே, குழந்தை விழுந்திருக்கும் குழிக்குள் மண் உதிர ஆரம்பிக்கும். ஆகவே, அதைத் தவிர்த்து பிற முறைகளை யோசிப்பது நல்லது என்கிறார் மணிகண்டன்.
"பல நாடுகளில் இதற்குக் கருவிகள் உண்டு. அம்மாதிரி கருவிகளை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு வாங்கித் தர வேண்டும்" என்கிறார் ராஜா.
மேலே சொன்ன சம்பவங்கள் அனைத்திலும் உயிரோடு மீட்கப்பட்ட குழந்தைகள் சில மணி நேரங்களில் மீட்கப்பட்டவையாகவே இருக்கின்றன. காலம் செல்லச்செல்ல குழந்தை உயிருடன் மீட்கப்படும் வாய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது.
24 மணி நேரத்திற்கு மேல், தண்ணீர் கூட குடிக்காமல் குழந்தை உயிரோடு இருக்கும்பட்சத்திலும் உடல் உறுப்புகள் பலத்த சேதமடையும். ஆகவே, வெகுவிரைவாக மீட்புப் பணிகளைத் துவங்கி முடிப்பதுதான் முக்கியமான சவால் என்பதுதான், முந்தைய மீட்புப் பணிகளில் குழந்தைகளை உயிரோடு மீட்ட இவர்கள் சொல்லும் முக்கியமான தகவல்.