ஆளுனர் விவகாரம்: ஒட்டு மொத்த மாநிலங்களுக்கு கிடைத்த வெற்றி: கனிமொழி எம்பி

Mahendran

செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (16:28 IST)
ஆளுநர்கள் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிமைகளுக்கு கிடைத்த வெற்றி என திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.
 
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டதால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பில் தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்கள் மீது ஆளுநர் எடுத்த நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாகவும் இந்த மசோதாக்கள் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்படுவதாகவும்  உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
 
மேலும் ஆளுநர் தனக்குரிய அதிகாரத்தில் தான் செயல்பட வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்க வேண்டும் என்றும்  தீர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே இந்த தீர்ப்புக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்த நிலையில் இது குறித்து கனிமொழி எம்பி  தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாடு சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாக்களை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், நிறுத்தி வைத்திருந்த ஆளுநருக்கு எதிராக, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். மாண்புமிகு முதல்வர் அண்ணன் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த வெற்றி தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி.
 
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்