எத்தியோப்பிய விமான விபத்து குறித்து பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா?

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (13:47 IST)
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு ஞாயிற்றுக்கிழமையன்று கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் (ET302) விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில், எட்டு விமான ஊழியர்கள் உள்பட விமானத்தில் இருந்த 157 பேரும் உயிரிழந்தனர்.
 
விமானத்தில் இருந்த நான்கு இந்தியர்களும் இதில் உயிரிழந்தனர்.
 
இச்சம்பவத்தை தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களும் சமூக ஊடகங்களில் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
 
ஆனால், இதை வைத்து தவறான தகவல்கள் சிலவும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
 
இந்த விமான விபத்துக்கு தொடர்பில்லாத பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.
 
"எத்தியோப்பிய விமானம் ET302 விபத்துக்குள்ளாகும் சில நிமிடங்களுக்கு முன்பாக, விமானத்திற்குள் இருக்கும் பயணிகள் பதற்றமடைந்த பிரத்தேயக காட்சிகள்" என்று சொல்லப்பட்டு ஒரு காணொளி பரவலாக பகிரப்படுகிறது.
 
ஆனால், இந்தக் காணொளி விபத்தில் சிக்கிய எத்தியோப்பிய விமானத்தில் எடுக்கப்படவில்லை என்றும், இவ்வாறு தவறாக பகிர்வது ஒரு உணர்ச்சியற்ற செயல் என்றும் அந்தக் காணொளியின் கீழ் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
இது மார்ச் 4, 2019ஆம் ஆண்டு டொரொன்டோவுக்கு சென்ற ET502 விமானம் என்று சில மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
இது தொடர்பாக ட்விட்டர் பயணாளர் சம்பா என்ற நபர் ட்வீட் செய்கையில், "கடந்த செவ்வாய்கிழமை எத்தியோப்பிய விமானத்தில் நாங்கள் கிட்டத்தட்ட இறந்துவிட்டோம். அது அடிஸ் அபாபாவில் இருந்து டொரொன்டோ சென்ற ET502 விமானம்" என்று கூறியுள்ளார்.
 
அந்த விமானத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமித்திற்காக எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டது.
 
ET502 விமானம் எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து 8:30 மணிக்கு புறப்பட்டது.
 
ஆனால், சௌதி அரேபியாவில் ஜட்டா அருகே 10,000 அடிக்கு விமானம் இறங்கத் தொடங்கியதையடுத்து அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
 
இந்தக் காணொளி ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த விபத்தின் காணொளி கிடையாது என்பதற்கு போயிங் விமானங்களின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மற்றொரு சான்றும் உள்ளது.
 
பகிரப்பட்டு வரும் காணொளியில் வரும் விமானத்தில் இரு நடைபாதைகள் இருக்கிறது. இது போயிங் 777 விமானத்தின் அம்சமாகும்.
 
ஆனால், தற்போது விபத்துக்குள்ளான விமானம் ஒரு நடைபாதை மட்டுமே கொண்ட போயிங் 773 விமானம்.
 
அதேபோல, விமானத்தின் மேற்பகுதி கடுமையாக சேதமடைந்தது போல காண்பிக்கும் ஒரு புகைப்படம் ட்விட்டரில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இது மார்ச் 10ஆம் தேதி நடைபெற்ற விபத்தின் புகைப்படம் என்று கூறப்படுகிறது.
ஆனால் இந்த புகைப்படமும் ET302 ரக விமானத்தின் விபத்தில் எடுக்கப்பட்டதல்ல என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்.
 
அது சான் ஃபிரான்சிஸ்கோவில் ஜூலை 2013ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆசியானா விமான விபத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
 
அப்புகைப்படம், அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தை சேர்ந்த மார்சியோ ஜோஸ் சன்சேஸ் எடுத்ததாகும்.
 
ஆசியானா விமானத்தில் பயணித்த 300 பேரில் மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 180 பேர் காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்