இந்த விஷயத்தில் அரசியல் வேண்டாம் – பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் வேண்டுகோள் !

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (13:42 IST)
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் யாரும் அரசியல் ஆதாரம் தேடவேண்டாம் என பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக போலிஸ் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்ததாகவும், அதில் பார் நாகராஜன் என்பவர்  பொள்ளாச்சி 34 வார்டு அம்மா பேரவைச் செயலாளராக இருப்பதால் அவரை மட்டும் போலிஸார் விடுவித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட திருநாவுக்கரசு என்ற மற்றொருக் குற்றவாளியும் மார்ச் 5ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.

அதிமுக பிரமுகர் இதில் சம்மந்தப்பட்டிருப்பதால் அதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இன்னும் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சம்மந்தப் பட்டவர்களை அதிமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும் சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான குரல்கள் வலுவாக எழ ஆரம்பித்தன.

ஆளும்கட்சியான அதிமுக மீது சாட்டப்படும் குற்றங்களுக்கு பதில் சொல்லும் விதமாக புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் பேசும் வீடியோ ஒன்று நேற்றுமுதல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் ‘திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மீது வழக்கு தொடர்ந்தது நாங்கள்தான். எங்கள் சுயநலத்திற்காக அல்லாமல் எனது தங்கையைப் போல வேறு எந்தப் பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில்தான் நாங்கள் வழக்கு தொடர்ந்தோம். வழக்கின் ஆதாரமான வீடியோவை போலீசில் ஒப்படைத்தோம். பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரிடம் புகார் தெரிவித்தவுடன், காவல் துறை மூலம் நடவடிக்கை எடுத்து உடனடியாக 3 பேரைக் கைது செய்தனர். அரசியல் விஷமிகள் சிலர் தங்கள் தேர்தல் தேதி அறிவித்தவுடன் ஆளும் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த இணையத்தில் அவதூறு பரப்புகின்றனர். உங்களிடம் குற்றத்திற்கான ஆதாரம் இருந்தால், தயவு செய்து அதைக் காவல் துறையிடம் கொடுங்கள். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். முடிந்தால் அந்த 4 பேருக்கும் தூக்குத் தண்டனை வாங்கித் தரப் போராடுங்கள். இதில் அரசியல் ஆதாயம் தேடாதீர்கள்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்