ஏர் இந்தியாவை ஊழியர்கள் வாங்கப் போகிறார்களா?

வியாழன், 17 டிசம்பர் 2020 (10:21 IST)
கடுமையான இழப்பை சந்தித்து வரும் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான 'ஏர் இந்தியா' விமானப் போக்குவரத்து நிறுவனத்தை ஏலம் விட்டு விற்க முடிவு செய்துள்ளது இந்திய அரசு.
 
பல நிறுவனங்கள் ஏலம் கேட்டு முன்மொழிவுகளை அனுப்பியுள்ளன.
 
ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்களும் அந்த நிறுவனத்தை வாங்க ஏலம் கோரியுள்ளனர்.
 
தனது வசமிருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க 2018ஆம் ஆண்டே இந்திய அரசு முயற்சி செய்தது. ஆனால் அப்பொழுது அந்தப் பங்குகளை வாங்க யாரும் முன்வரவில்லை.
 
நல்ல நிதி நிலையில் இல்லாமல் போராடி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தத் தேவையான அளவு பங்குகளை வாங்க ஏர் இந்தியா ஊழியர்கள் குழு ஒன்று முன் வந்துள்ளது. இந்தப் பெரும்பான்மை பங்குகள் தற்போது இந்திய அரசின் வசம் உள்ளன.
 
ஏர் இந்தியா நிறுவனம் 1932ஆம் ஆண்டு டாடா குழுமத்தால் நிறுவப்பட்டது.
 
அரசின் வசம் உள்ள 100% பங்குகளையும் வாங்க டாட்டா குழுமமும் ஏலம் கோரியுள்ளது.
 
1950களில் டாடா குழுமம் இந்திய அரசுக்கு தனது பெரும்பான்மை பங்குகளை விற்ற பின்பு ஏர் இந்தியா நிறுவனம் பொதுத்துறை நிறுவனமானது.
 
பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் மட்டுமல்லாமல் இந்திய அரசின் தொடர் நிதி உதவியால் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளில் தன்வசம் உள்ளவற்றை விற்று அந்த நிறுவனத்தை முழுதும் தனியார்மயமாக்க நரேந்திர மோதி தலைமையிலான அரசு விரும்புகிறது.
 
நூற்றுக்கணக்கான விமானங்கள், ஆயிரக்கணக்கான விமானிகள் மற்றும் விமான சேவை குழுவினர் என ஏர் இந்தியா நிறுவனத்தின் மதிப்புமிக்க பல சொத்துகள் உள்ளன.
 
ஏர் இந்தியாவை ஏலம் விடும் இந்திய அரசு
அரசின் வசம் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 % பங்குகளை வாங்க ஏலம் கோருவதற்கான காலக்கெடு இந்த வாரம் முடிந்தது. அதில் அமெரிக்காவில் இருந்து இயங்கும் முதலீட்டு நிறுவனமான இன்டரப்ஸ் (Interups) நிறுவனம் ஒன்று.
 
அந்த நிறுவனம் கோரியுள்ள ஏலத்தில் ஏர் இந்தியாவின் பங்குகளை 49 சதவிகிதம் இன்டரப்ஸ் நிறுவனம் வைத்திருக்கும் என்றும் அதன் நிர்வாகத்தை கட்டுப்படுத்த தேவையான பெரும்பான்மை பங்கான 51 சதவிகித பங்குகளை அதன் ஊழியர்கள் வைத்திருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏர் இந்தியா நிறுவனத்தை கணிசமான அளவில் உரிமம் கொண்டிருக்கத் தேவையான பங்குகளை அதன் ஊழியர்களுக்கு நாங்கள் வெளிப்படையாகவே வழங்குகிறோம் என்று இன்டரப்ஸ் நிறுவனத்தின் தலைவர் லட்சுமி பிரசாத் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
"ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் செலவாகும் பணம் அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்வோம். முதலீட்டு செலவுகள் எதையும் ஏர் இந்தியா ஊழியர்கள் வழங்க தேவையில்லை," என்று அவர் தெரிவித்தார்.
 
51 சதவிகித கட்டுப்பாட்டு பங்குகள் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அவர்கள் வழங்கும் ஆழமான மதிப்பிட முடியாத பங்களிப்புக்காக ஊழியர்கள் வசம் வழங்கப்படும் என்று கூறியுள்ள லட்சுமி பிரசாத் ஏர் இந்தியா ஊழியர்கள் இந்த விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் முதுகெலும்பு என்று கூறியுள்ளார்.
 
ஏர் இந்தியா ஊழியர்கள் மற்றும் அதன் நிர்வாகத்தை விட வேறு யாருக்கும் அந்த நிறுவனத்தைப் பற்றி நன்றாக தெரியாது என்றும் அவர் கூறினார்.
 
ஏர் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றில் நிறுவனத்தை புதிதாக வாங்குபவர்கள் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டி இருக்கும் என்று கூறுகிறார் ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குனர் ஜிதேந்திர பார்கவா. 'தி டிசெண்ட் ஆஃப் ஏர் இந்தியா' என்ற புத்தகத்தையும் இவர் எழுதியுள்ளார்.
 
"இந்தியா ஒரு வளரும் சந்தை. இங்கு பெரிய அளவில் வாய்ப்புகள் உள்ளன. அரசு அதிகாரிகளை விட தனியார் நிறுவனமாக ஏர் இந்தியா இயங்கினால் சிறப்பாக இருக்கும் என்பதே என் கருத்து," என்று அவர் கூறுகிறார்.
 
ஏர் இந்தியா - 'சர்வதேச விமானப் போக்குவரத்தில் முன்னிலை பெறும்'
இழப்பில் இயங்கும் நிறுவனங்களை வாங்கி அதை லாபகரமான நிறுவனங்களாக மாற்றுவதற்காக அறியப்பட்ட முதலீட்டு நிறுவனமான இன்டரப்ஸ் வேறு ஓர் இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனத்தையும் வாங்க தாங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அந்த முயற்சி பலன் அளித்தால் அந்த நிறுவனத்தையும் ஏர் இந்தியா நிறுவனத்துடன் ஒன்றாக இணைப்போம் என்றும் இன்டரப்ஸ் கூறியுள்ளது. ஆனால் அது எந்த இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனம் என்று தெரிவிக்கவில்லை.
 
இரண்டு விமான நிறுவனங்களும் அவ்வாறு ஒன்றாக இணைக்கப்பட்டு ஏர் இந்தியா இயங்கினால் இந்தியாவிற்கு விமானம் மூலம் வருவது மற்றும் இந்தியாவில் இருந்து விமானம் மூலம் செல்வது ஆகியவற்றுக்கு உலக அளவிலேயே ஏர் இந்தியா நிறுவனம் முன்னணி நிறுவனம் ஆகும் என்று லட்சுமி பிரசாத் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
டாட்டா நிறுவனத்துடன் தாங்கள் ஏலத்தில் போட்டியிடுவதை டேவிட் மற்றும் கோலியாத்துக்கு இடையே நடந்த போட்டி என்று குறிப்பிட்ட லட்சுமி பிரசாத், "எப்படி வெல்ல வேண்டும் என்பதை டேவிட் அறிந்திருந்தார் நாங்களும். நம்பிக்கையுடன் இருக்கிறோம்," என்று கூறினார்.
 
2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் குறித்த விவரத்தை இந்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்