கொரோனா தொற்றுடன் தஞ்சம் கோரிய பெண்ணுக்கு ஹெலிகாப்டரில் பிரசவம்

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (09:54 IST)
இத்தாலியின் லம்பேடுசா தீவிலிருந்து சிசிலி தீவுக்கு ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்யப்பட்ட போது தஞ்சம் கோரி ஒருவருக்கு குழந்தை பிறந்தது.

மகப்பேறுக்கு முன்பே இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பெண் லம்பேடுசா தீவிலுள்ள தஞ்சம் கோரிகளுக்கான தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

அதன் கொள்ளளவைவிடப் பத்து மடங்கு பேர் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது அந்த மையத்திலிருந்து சிசிலியின் தலைநகர் பலெர்மோவுக்கு ஹெலிகாப்டர் மூலம் அவரை இடம் மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.


அந்த ஒரு மணி நேரப் பயணம் முடியும் முன்னர் ஹெலிகாப்டரிலேயே அவருக்குக் குழந்தை பிறந்தது.

ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் தஞ்சம் கோரிகள் பெரும்பாலும் கடல் வழியாக வருகின்றனர். (கோப்புப்படம்)

தாயும் சேயும் பலெர்மோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் உள்ளனர். அந்தப் பெண் யாரென்று இதுவரை அடையாளப் படுத்தப்படவில்லை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இத்தாலிக்கு வரும் அகதிகள் மற்றும் தஞ்சம் கோரிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 19,400 குடியேறிகள் தஞ்சம் கோரி இத்தாலிக்கு கடல் மார்க்கமாக வந்துள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 5,200 ஆக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்