லத்திஃபா: இன்ஸ்டாகிராமில் பதியப்பட்ட பல மாதங்களாக காணாமல் இருந்த துபாய் இளவரசியின் புகைப்படம்

Webdunia
ஞாயிறு, 23 மே 2021 (00:10 IST)
இரு இன்ஸ்டாகிராம் கணக்குகளில் துபாய் இளவரசி லத்திஃபாவின் புகைப்படம் ஒன்று இந்த வாரம் பகிரப்பட்டுள்ளது.
 
துபாய் ஆட்சியாளரின் மகளான லத்திஃபா சில மாதங்களாக பொதுவெளியில் காணப்படவில்லை. பேசவும் இல்லை.
 
பிப்ரவரி மாதம் பிபிசியின் பனரோமாவில் தான் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் லத்திஃபா பேசிய வீடியோ ஒன்று வெளியானது.
 
பிபிசியால் இந்த புகைப்படத்தை உறுதி செய்ய முடியவில்லை. மேற்கொண்டு எந்த தகவல்களும் வழங்கப்படவில்லை.
 
இருப்பினும் லத்திஃபாவின் தோழி ஒருவர் புகைப்படத்தில் இருப்பவர் லத்திஃபாதான் என்று உறுதி செய்துள்ளார்.
 
இந்த புகைப்படம் தென்படுவது எதேச்சையானது இல்லை என பிபிசி புரிந்து கொள்கிறது. இருப்பினும் பல வெளிவராத தகவல்களுடன் இது தொடர்புடையது.
 
லத்திஃபாவை விடுவிக்க வேண்டும் என்ற பரப்புரையில் ஈடுபடும் குழுவின் துணை நிறுவனர் டேவிட் ஹைய், "லத்திஃபாவை விடுவிக்க வேண்டும் என்று முன்னெடுத்த பரப்புரையால் பல முக்கிய நேர்மறையான விஷயங்கள் நடந்துள்ளன. இந்த கட்டத்தில் நாங்கள் அதுகுறித்த மேற்கொண்ட தகவல்களை பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை, சரியான நேரத்தில் அதுகுறித்த அறிக்கை ஒன்று வெளியிடப்படும்" என தெரிவித்துள்ளார்.
 
இளவரசி லத்தீஃபா: மாயமாகிப் போன துபாய் ஆட்சியாளரின் மகள்
துபாய்: சட்டம், மனித உரிமைகளில் உண்மை முகம் என்ன?
லண்டனில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதரகம் இதுகுறித்து பிபிசி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.
 
இந்த புகைப்படம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ஐநா., லத்திஃபா உயிருடன் உள்ளார் என்று நம்பத்தகுந்த ஆதாரங்களுக்காக காத்திருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தது. ஆதாரங்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்குவதாக தெரிவித்துள்ளது.
 
அந்த புகைப்படத்தில் இருப்பது என்ன?
அந்த புகைப்படத்தில் இளவரசி லத்திஃபா துபாயில் உள்ள ஷாப்பிங் `மாலான மால் ஆஃப் தி எமிரேட்ஸில்` உள்ளார். அவர் இரு பெண்களுடன் அமர்ந்துள்ளார்.
 
லத்திஃபாவின் நண்பர்கள் அந்த இருபெண்களையும் அடையாளம் காணுவதாக பிபிசியிடம் தெரிவித்தனர். மேலும் அவர்கள் லத்திஃபாவிற்கு தெரிந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
 
அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதியப்பட்டுள்ளது. ஆனால் தேதியோ அல்லது நேரத்தையோ அல்லது இடத்தையோ கண்டறியும் மெட்டா டேட்டா அதில் இல்லை.
 
இருப்பினும் அந்த புகைப்படத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மே 13ஆம் தேதி வெளியான `டிமோன் ஸ்லேயர்: முகேன் ட்ரைன்` என்னும் படத்திற்கான விளம்பரம் தெரிகிறது.
 
லத்திஃபாவுடன் இருக்கும் இரு பெண்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளிலும் இந்த புகைப்படம் பதியப்பட்டுள்ளது. அதில் ஒருவர், "மால் ஆஃப் எமிரேட்ஸில் நண்பர்களுடன் ஒரு அழகிய மாலைபொழுது" என குறிப்பிட்டுள்ளார்.
 
இருவரில் யாரும் பிபிசி லத்திஃபா குறித்து கேட்ட கேள்விகளுக்கோ அல்லது இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்றோ கூறவில்லை.
 
`இளவரசி லத்திஃபா உயிருடன் இருக்கும் ஆதாரம் இதுவரை காண்பிக்கப்படவில்லை`
 
"வெளிநாட்டவர்களுக்கும் இனி குடியுரிமை" - ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பால் யாருக்கு பயன்?
 
"இந்த புகைப்படம் உண்மையானதாக இருக்கும்பட்சத்தில் இது ஏதோ ஒரு வகையில் அவர் உயிரோடு இருப்பதாக தெரிகிறது. ஆனால் அவரின் சுதந்திரம் குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை" என மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் கென்னத் ரோத் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. பிப்ரவரி மாதம், "லத்திஃபா வீட்டில் கவனித்து கொள்ளப்படுகிறார்" என்று தெரிவித்திருந்தது.
 
"அவர் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறார். அவர் தகுந்த நேரத்தில் வெளியே வருவார் என நம்புகிறோம்," என அறிக்கை ஒன்று தெரிவித்தது.
 
லத்திஃபாவிற்கு என்ன ஆனது?
லத்திஃபா, ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் 25 குழந்தைகளில் ஒருவர். இவர் பிப்ரவரி 2018ஆம் பிப்ரவரி மாதம் துபாயிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்தார்.
 
அவர் தப்பிச் செல்வதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில், அவரின் வாழ்க்கை பெரிதும் கட்டுப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். "2000ஆம் ஆண்டிலிருந்து நான் நாட்டைவிட்டு வெளியேறவில்லை. நான் பயணிப்பதற்கும், படிப்பதற்கும் இயல்பாக இருப்பதற்கும் பலமுறை அனுமதி கோரி வருகிறேன் ஆனால் அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை" என தெரிவித்திருந்தார்.
 
ஆனால் அவர் தப்பி சென்ற அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்திய பெருங்கடலில் எட்டு நாட்கள் கடுமையான பயணத்தை மேற்கொண்ட பிறகு கமாண்டோக்களால் அவர் பலவந்தமாக பிடிக்கப்பட்டு துபாய்க்கு அழைத்து வரப்பட்டார்.
 
லத்திஃபாவின் தந்தை பின்னாளில் இதை "காப்பாற்றும் நடவடிக்கை" என தெரிவித்திருந்தார்.
 
2021 பிப்வரியின் போது பிபிசி பனோரமாவில், இளவரசி லத்திஃபா ரகசியமாக பதிவு செய்த காணொளிகளை வெளியிட்டு அவரின் வெளிநாட்டு நண்பர்களை தொடர்பு கொண்டது. அந்த வீடியோவில் அவர் பிடிப்பட்டது குறித்தும் அவர் துபாயில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருப்பது குறித்தும் தெரிவித்தார்.
 
அவர் வில்லா ஒன்றில் எந்தவித மருத்துவ மற்றும் சட்ட உதவிகளும் இல்லாமல் தனியாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜன்னல்களும் கதவுகளும் மூடப்பட்டு காவல்துறையினரால் பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்