இந்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி எல்லையில் நடத்தி வரும் போராட்டத்தை ஒட்டி விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு இடையே இன்று சனிக்கிழமை ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்து வரும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது கடந்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளின்போது தாங்கள் முன்வைத்த ஒவ்வொரு கோரிக்கைக்கும் அரசின் பதில் என்ன என்பதை அளிக்கவேண்டும் என்று விவசாயிகள் பிரதிநிதிகள் கேட்டதாகவும், இதற் மத்திய அரசு ஒப்புக்கொண்டதாகவும் ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது தங்களுக்கு தீர்வுதான் வேண்டும் என்றும், அரசு உத்தரவாதம் தேவையில்லை என்றும் விவசாயிகள் கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.
ஏற்கெனவே விவசாயிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மீது அரசு என்ன முடிவெடுத்துள்ளது என்பதையும் விவசாயிகள் கேட்டுள்ளனர்.
முந்தைய சுற்றுகளைப் போலவே, இந்த முறையும் விவசாயிகள் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை இடைவேளையின்போது அரசு அளித்த உணவைப் புறக்கணித்துவிட்டு தாங்கள் கொண்டு வந்த உணவையே சாப்பிட்டுள்ளனர்.
அவர்களுக்காக உணவு எடுத்துக்கொண்டு வாகனம் ஒன்று பேச்சுவார்த்தை நடக்கும் இடத்துக்கு வந்திருந்தது.
டெல்லியின் டிகரி எல்லைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்து உரையாடினார் பிபிசி இந்தி சேவை செய்தியாளர் பியுஷ் நாக்பால். தம்மிடம் பேசிய விவசாயிகள், இன்றைய பேச்சுவார்த்தை நல்ல முடிவைக் கொண்டுவரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள் என்கிறார் அவர்.
தமிழ்நாடு, பிகாரில் போராட்டம்
கடந்த சில நாள்களாக இந்த டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் முற்றுகைப் போராட்டம் நடத்தி வந்தன. இந்நிலையில் இன்று டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், புதிய விவசாயிகள் சட்டங்களுக்கு எதிராகவும் சேலத்தில் போராட்டம் நடத்தியது திமுக.
அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார். அதைப் போல டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பிகாரிலும் போராட்டம் நடந்தது.
பிகார் தலைநகர் பாட்னாவில், காந்தி மைதானத்தில் எதிர்க்கட்சிக் கூட்டணியான மகாகட்பந்தன் (பெருங்கூட்டணி) சார்பில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
கூட்டணியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்பட முக்கியத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.