கூவத்தூரில் பேரம் ; மக்களுக்கு தெரியும்; புரட்சி ஒன்றும் வெடிக்காது : சீமான் கிண்டல்

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2017 (18:12 IST)
கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் இருந்தபோது அவர்களுக்கு சசிகலா அணியினர் பல கோடி ரூபாய் கொடுத்தது குறித்து ஆங்கில ஊடகமான டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நேற்று ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலா அணியில் இருந்து தப்பித்துவந்து பன்னீர்செல்வம் அணியில் இணைந்த எம்எல்ஏ சரவணன் பேசும் வீடியோ உள்ளது.


 

 
அதில் பேசும் எம்எல்ஏ சரவணன், கூவத்தூர் ரிசார்ட்டில் அழைத்து செல்ல பேருந்தில் ஏற்றும்போது 2 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், பின்னர் 4 கோடி பேரம் பேசப்பட்டது என்றும், கூவத்தூர் விடுதியில் வைத்து 6 கோடி ரூபாய் வரை தருவதாக கூறினர்.
 
அதில் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களான கருணாஸ், தனியரசு, தமீம் அன்சானி ஆகியோருக்கு அதிகளவு பணமாக தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் ஓபிஎஸ் அணி சார்பில் ஒரு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் சரவணன் எம்எல்ஏ கூறியுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. 
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சீமான் “அதிமுக கட்சிக்குள்ளே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனாலேயே இந்த விவகாரங்கள் வெளிவந்துள்ளன. இந்த விவகாரத்தை வெளியிட்ட சரவணன் எம்.எல்.ஏ எவ்வளவு வாங்கினார் என்பதை தெரிவிக்க வேண்டும். மேலும், தமீம் அன்சாரியிடம் நான் பேசினேன். அவர் நான் வாங்கவில்லை என்று கூறிவிட்டார். எனவே, மற்ற இரண்டு பேரும் கண்டிப்பாக வாங்கியிருப்பார்கள் எனத் தெரிகிறது. இது மக்களுக்கும் தெரியும். ஆனால், இதற்காக தமிழகத்தில் புரட்சி ஒன்றும் வெடிக்கப்போவதில்லை. அப்படி நடந்திருந்தால், கொள்ளையடித்து சொத்து சேர்த்த கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் மீண்டும் மீண்டும் மக்கள் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள்” என அவர் கிண்டலாக கூறினார்.
 
வெளியான வீடியோ குறித்து கருத்து தெரிவித்த சரவணன் எம்.எல்.ஏ,  “அந்த வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால், அதில் என்னைப் போலவே யாரோ பேசியுள்ளனர். அதில் கூறப்படும் கருத்துகள் என் கருத்துகள் இல்லை” என இன்று மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்