அதிகரிக்கும் நெருக்கடி; ஓ.பி.எஸ் ராஜினாமா? - போயஸ் கார்டனில் நடந்து என்ன?

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2017 (08:29 IST)
அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவே தமிழகத்தின் முதல் அமைச்சர் பதவியையும் ஏற்க வேண்டும் என அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை போர்க்கொடி தூக்கியிருப்பது ஓ.பன்னீர் செல்வத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நேற்று காலை போயஸ் கார்டன் சென்ற தம்பிதுரை, அங்கு சசிகலாவை சந்தித்து விட்டு, செய்தியாளர்களிடம் பேசிய போது “ கட்சி பொறுப்பு ஒருவரிடமும், ஆட்சி பொறுப்பு ஒருவரிடம் இருப்பது சரியாக இருக்கிறது. இதுதான் உத்தரபிரதேசத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, சசிகலா தமிழக முதல் அமைச்சராக வேண்டும் என, அவரிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். இதுதான் என் விருப்பம் மற்றும் அடிமட்ட தொண்டர்களின் விருப்பம்” எனக் கூறினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பையும், முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியது.

 
மேலும், நேற்று பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் கோட்டைக்கு சென்று ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். நேற்று மாலை போயஸ் தோட்டம் சென்று சசிகலாவை சந்தித்து பேசினார். அவருடன் அதிமுக அமைச்சர்கள் மணிகண்டன், தங்கமணி ஆகியோரும் சென்றனர். அவர்களின் சந்திப்பு 2 மணி நேரம் நடைபெற்றது. 


 

 
அதில் சசிகலா முதல் அமைச்சராக பதவியேற்காக, ஓ.பி.எஸ் தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்து விட்டதாகவும், எந்த நேரத்திலும் அவர் பதவி விலகுவார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
 
அதன்பின் கோட்டைக்கு சென்ற ஓ.பி.எஸ், இரவு 7 மணிக்கு மேல், முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார் எனவும், அவர் முதல் அமைச்சராக இருந்த வரை எடுத்த முடிவுகளை அமைச்சரவையின் அனுமதியோடு நிறைவேற்றியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுதான் அவரின் கடைசி கேபினேட் கூட்டம் எனக்கூறப்படுகிறது.
 
இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்திலும், தமிழக அரசியல் சூழ்நிலையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்