சசிகலாவின் அடுத்த மூவ் என்ன? - அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.களுக்கு அவசர அழைப்பு

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2017 (12:19 IST)
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அவசர கூட்டத்தை அதிமுக பொது செயலாளர் சசிகலா இன்று கூட்டியுள்ளார்.


கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தமிழக முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா காலமானார். இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு ஜெயலலிதாவின் தோழி சசிகலா பொதுச்செயலாளராக பதவியேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து டிசம்பர் 31ஆம் தேதி வி.கே.சசிகலா பொதுச் செயலாளராக அதிமுக தலைமை அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டார். மேலும், சசிகலாவே தமிழக முதல்வராகவும் பதவியேற்க வேண்டுமென அதிமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகளையும் சந்தித்து பேச சசிகலா முடிவெடுத்தார். தொடர்ந்து, ஜனவரி 4ஆம் தேதி முதல், 9ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இதற்கிடையில், சசிகலா தலைமைப் பதவிக்கு எதிர்க்கும் சில அதிமுக நிர்வாகிகள், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமின் மகளான தீபா தலைமைப் பதவிக்கு வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் தினமும் தீபாவின் வீட்டிற்கு அவரை பார்ப்பதற்காக வருகின்றனர். அவர்களிடம் தீபா, அரசியலில் ஈடுபடுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.

இந்த களேபரங்களுக்கு இடையில், தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் பேசிய நடராஜன், “அதிமுகவை உடைக்க மத்திய பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவர்களுடைய திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. அதிமுகவை உடைக்கும் பிரதமர் மோடியின் எண்ணமும் நிறைவேறாது'' என்றார்.

இதன் பின்னர் பொங்கல் பண்டிகையை ஓட்டி தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேலாக, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் எனவும், விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும் போராட்டம் நடைபெற்றது.

இதற்கிடையில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அமைதியான முறையில் போராடியவர்கள் மீது, தமிழக அரசு காவல்துறை மூலம் வன்முறையை கட்டவிழ்த்தது. அறவழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தினர்.

பல இடங்களில் மாணவர்கள், இளைஞர்களின் மண்டைகள் உடைந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். பெண்கள் என்று பார்க்காமல் காவல் துறையினர் ஆவேசமாக தாக்கினர்.

இந்நிலையில் சட்டமன்றத்தில் மேற்கண்ட பிரச்சனைகள் எழும் நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு எதிர்கொள்வது, பாராளுமன்ற கூட்ட தொடரில் அதிமுக உறுப்பினர்களின் நிலைப்பாடுகள், செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா தலைமையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் கூடுகிறது. அதன் பின்னர், 5 மணியளவில் எம்பிக்கள் கூட்டம் நடக்கிறது. மேலும், சில விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்