மறுபடியும் முதலில் இருந்தா? - தேமுதிக, தமாகாவிற்கு அழைப்பு விடுக்கும் ம.ந.கூட்டணி

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (05:02 IST)
உள்ளாட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிட தேமுதிக, தமாகா கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

 
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் வைகோ, சிபிஐஎம் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைவர்கள், உள்ளாட்சித் தேர்தலை மக்கள் நலக் கூட்டணி இணைந்து சந்திப்பது என்றும், தொகுதி பங்கீடுகள் குறித்து மாவட்ட அளவில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஆலோசித்து முடிவு செய்வது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என தலைவர்கள் கூறினர்.
 
கல்விக் கடனை வசூலிக்கும் பொறுப்பு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்த மநகூ தலைவர்கள், இதனால் மதுரையில் தற்கொலை செய்துகொண்ட மாணவர் லெனின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர். இத்தகைய நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.
 
செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த தலைவர்கள், உள்ளாட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிட தேமுதிக, தமாகா கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றனர்.
அடுத்த கட்டுரையில்