தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டமன்ற இடைத் தேர்தலில் தேமுதிகவிற்கு ஆதரவு இல்லை என்று திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், மக்கள் நலக் கூட்டணி, தேமுதிகவோடு கூட்டணி அமைத்தது. ஆனால், அந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அதன்பின் தேமுதிகவிற்கு இறங்கு முகமே தென்பட்டது. சமீபத்தில் விஜயகாந்தை முதல் அமைச்சராக அறிவித்தது தவறு என்று வைகோ கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட காஞ்சிபுரம், அரவங்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம ஆகிய 3 தொகுதிகளில் நவம்பர் 19ம் தேதி நடைபெறவுள்ளது.
எனவே, இந்த தேர்தலில் தேமுதிக மற்றும் மக்கள் நலக் கூட்டணி இணைந்து செயல்படுமா என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில், அந்த மூன்று தொகுதிகளும் தேமுதிக வேட்பாளர்களை அறிவித்து முற்றுப்புள்ளி வைத்தார் விஜயகாந்த். ஆனால், மக்கள் நலக் கூட்டணி, தேமுதிகவிற்கு ஆதரவு தருமா என்பது குழப்பமாகவே இருந்தது.
இந்நிலையில் இதுபற்றி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த வைகோ, ம.ந.கூ. வலிய சென்று யாருக்கும் ஆதரவு அளிக்க முடியாது. அவர்களாக கேட்க வேண்டும். அப்படி கேட்டால் பரிசீலிப்போம் என்று கூறியிருந்தார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த பிரேமலதா “நாமாக சென்று ஆதரவு கேட்பது சுயநலம். அதிமுக மற்றும் திமுகவிற்கு மாற்றாக தேமுதிகவை வெற்றி பெற வைக்கும் எந்த கட்சியும் எங்களை ஆதரிக்கலாம்” என கூறியிருந்தார்.
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த திருமாவளவன் “வைகோவின் கருத்துதான் எனது கருத்தும். நடைபெறவுள்ள 3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், விடுதலை சிறுத்தையின் ஆதரவு தேமுதிகவிற்கு இல்லை. யாரையும் வலிய போய் ஆதரிக்கும் நிலைமையில் மக்கள் நலக் கூட்டணி இல்லை” என்று தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தை கட்சியின் ஆதரவு இல்லை என்று அவர் கூறியிருந்தாலும், அது மக்கள் நலக் கூட்டணியின் ஆதரவு இல்லை என்று அவர் கூறுவது போல்தான் இருக்கிறது.
மொத்தத்தில், மக்கள் நலக் கூட்டணி, விஜயகாந்தை புறக்கணிப்பதைத்தான் வைகோ மற்றும் திருமாவளவன் ஆகியோரின் கருத்துகள் காட்டுகிறது.