33 வருடங்கள் உடன் இருந்தது மட்டுமே தகுதி இல்லை - தீபா விளாசல்

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (16:09 IST)
ஜெ.வின் அண்ணன் மகள் தீபா இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.


 

 
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் “ஜெ. மரணம் குறித்து மருத்துவர்கள் அளித்த விளக்கம் திணிக்கப்பட்ட ஒன்று. அவர்களின் விளக்கத்தில் யாருக்கும் திருப்தி ஏற்படவில்லை. 2 மாதங்கள் கழித்து இப்போது ஏன் இதை செய்துள்ளார்கள்? 
 
சசிகலாவை முதல்வராக அமர வைப்பதற்கு எந்த சிக்கலும் வந்து விடக்கூடாது என்பதற்காக இதை செய்துள்ளார்கள்.  அவர் முதல்வராவதை ஏற்க முடியாது. அதை மக்களும் விரும்பவில்லை. சசிகலா உண்மைக்கு புறம்பாக நடந்து கொள்கிறார். சசிகலா முதலமைச்சரானால், தமிழகத்தில் நிலையற்ற தன்மை தொடரும். ஜெயலலிதாவோடு ஒன்றாக 33 வருடங்கள் வாழ்ந்தார் என்பது மட்டுமே ஒரு முதல்வருக்கான தகுதி கிடையாது.
 
அவரைக் கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை. நான் தொடர்ந்து அரசியல் பணியாற்றுவேன். என்னை அரசியலுக்கு வரும்படி அதிமுக தொண்டர்கள் அழைத்தார்கள். மக்கள் பணியே என்னுடைய இலக்கு. வருகிற பிப்ரவரி 24ம் தேதி என்னுடைய அரசியல் பணி தொடங்கும். 
 
புதிய தலைவர் உருவாக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். நான் செல்லும் இடமெங்கும் மக்கள் எனக்கு ஆதரவு தருகிறார்கள். அனைத்து மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள  முடிவெடுத்திருந்தேன். ஆனால், அதற்கு பல்வேறு தடைகள் வந்தன. ஆனாலும், விரைவில் சுற்றுப்பயணம் செல்வேன்.
 
நான் அரசியலில் வளர்ந்து விடக்கூடாது என் நினைக்கும் சசிகலா, காவல் அதிகாரிகள் மூலம் என்னை கட்டுப்படுத்த நினைக்கிறார். சமீபத்தில் ஆர்.கே.நகரில் அரசுப் பள்ளி மாணவர்கள் நான் உதவி செய்ய சென்ற போது காவல் துறையினர் என்னை தடுத்தார்கள்” என தீபா கூறினார்.
அடுத்த கட்டுரையில்