கேமரூன் அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளிடையே பேரம் பேசியது - ’விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2016 (19:48 IST)
பிரதமர் டேவிட் கேமரூனின் அரசாங்கம், ஐரோப்பிய யூனியன் மேற்கொண்ட அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவு தேடி ஐரோப்பிய நாடுகளிடையே பேரம் பேசியது என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே குற்றம்சாட்டி உள்ளார்.
 

 
கடந்த வெள்ளியன்று [ஜூன் 24ஆம் தேதி] பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டுமா என்ற கருத்தறியும் வாக்கெடுப்பில் பெரும்பான்மையினர் வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர்.
 
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாக்கெடுப்பில், 1 கோடியே 74 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், ஏறக்குறைய 52 சதவீத வாக்காளர்கள் விலகுவதற்கு ஆதரவாகவும், 48 சதவீதத்தினர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர்.
 
பிரிட்டன் மக்களின் இந்த முடிவால் உலகமே அதிர்ந்து போயுள்ளது. அதன் தாக்கமாக, இந்தியாவில்கூட தங்கத்தின் விலை உடனடியாக சவரனுக்கு ரூ. 1140 விலை ஏறியது குறிப்பிடத்தக்கது. மேலும், இக்கட்டான நிலைமைகள் மற்ற நாடுகளிலும் ஏற்படலாம் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
 
இந்நிலையில், புகழ்பெற்ற பத்திரிகையாளரும், விக்கி லீக்ஸ் இணைய நிறுவனத்தின் தலைவருமான ஜுலியன் அசாஞ்சே கூறுகையில், “பிரிட்டனுக்கு ஐரோப்பிய யூனியன் கசந்துவிட்டது; ஐரோப்பிய யூனியனுக்கு பிரிட்டன் கசந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், பிரிட்டனில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் ஜனநாயக நம்பகத் தன்மையை இழந்துவிட்டன என்பதையே இந்த முடிவு காட்டுகிறது; இன்றைக்கு ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற வேண்டும் என்று கருத்து கூறுபவர்கள்தான் இதற்கு முன்பு ஐரோப்பிய யூனியனில் இருக்க வேண்டும் என்று முதன் முதலில் சொன்னவர்கள்.
 
பிரதமர் டேவிட் கேமரூனின் அரசாங்கம், ஐரோப்பிய யூனியன் மேற்கொண்ட அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவு தேடி ஐரோப்பிய நாடுகளிடையே பேரம் பேசியது; இப்போது தனக்கு எதுவுமே தெரியாததுபோல ஐரோப்பிய யூனியன் மீது குற்றம்சாட்டுகிறது” என்றும் அசாஞ்சே சாடினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்