ஜெயலலிதா பெருமிதம் கொள்ளலாம்; எதார்த்தம் அப்படி இல்லை - கொந்தளிக்கும் முத்தரசன்

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2016 (19:14 IST)
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகச் சரியாக இருப்பதாக முதலமைச்சர் பெருமிதம் கொள்ளலாம், தன்னைத் தானே அவர் பாராட்டிக் கொள்ள அவருக்கு உரிமையுண்டு. ஆனால் எதார்த்தம் அப்படி இல்லை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தின் தலைநகர் சென்னை கொலை நகரமாக மாறி விட்டதோ என மக்கள் அஞ்சும் வகையில், படுபயங்கர கொலைகள் நித்தம், நித்தம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. வழக்கறிஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
 
பட்டப் பகலில், பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் எவ்வித அச்சமும் இன்றி கொலை செய்யப்படுகின்றனர்.கொலை செய்வதை தொழிலாகக் கொண்டு செயல்படும் கூலிப்படை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
 
கொலை செய்ய கூலிப் படையை பயன்படுத்துபவர்கள், கொலைகாரர்களை காப்பாற்றவும், அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதுடன், தண்டனை பெறாமல் தப்பிக்க வைக்கவும் உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
 
சமூக விரோத கும்பலுக்கு சேவை செய்வதில் ஊழல் அதிகாரிகளும், அரசியல் செல்வாக்குமிக்க நபர்களும் வெட்கப்படுவதில்லை. பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் இக்கும்பலின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த கவலைக்குரியது.
 
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகச் சரியாக இருப்பதாக முதலமைச்சர் பெருமிதம் கொள்ளலாம், தன்னைத் தானே அவர் பாராட்டிக் கொள்ள அவருக்கு உரிமையுண்டு. ஆனால் எதார்த்தம் அப்படி இல்லை என்பதனை கடந்த இருபது தினங்களாக தலைநகர் சென்னையில் ஒன்றன் பின் ஒன்றாக தினந்தோறும் நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்கள் உறுதிப் படுத்துகின்றன.
 
தலைநகர் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் அண்மைக் காலமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகி உள்ளனர். மக்கள் அச்சமின்றி வாழவும் அவர்களது உயிருக்கும், உடைமைக்கும், உரிய பாதுகாப்பை வழங்கவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்