மெக்சிகோ நாட்டில் நடந்த காளைச் சண்டையில் வீரர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்.
மெக்சிகோவில் காளை சண்டை மிகப் பிரபலமானது. இந்தக் காளைச் சண்டையை மக்கள் விரும்பி காண்பது வழக்கம்.
ஒரு பெரிய மைதானத்தில் வீரர் ஒருவர் தன் கையில் வண்ணத் துணியுடன் நின்றிருப்பார். அந்த துணியை அசைக்கும்போது, எதிரே நின்றிருக்கும் காளை ஆவேசத்தில் அதனை நோக்கி வரும். நல்ல பயிற்சி மற்றும் திறமை கொண்ட வீரர் தைரியத்துடன் அந்த காளையை தடுத்து, காளை முட்டிவிடாத வகையில் லாவகத்துடன் விலகிவிடுவார்.
இந்த நிலையில், லக்ஸ்காலா மத்திய மாகாணத்தில் நடந்த காளை சண்டையின்போது, ஜோஸ் ஆல்பர்டோ ஆர்டிகா(26), ஆடுகளத்தில் மண்டியிட்டபடி, கையில் துணியுடன் காளைக்காக காத்திருந்தபோது, ஆவேசத்தில் அவரை நெருங்கிய காளை அவர் விலகுவதற்குள் அவரை முட்டி தூக்கி வீசியது. இதில் அவருக்கு காது, வாய் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. எனவே மைதானத்தில் இருந்து வெளியேறிய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில், தலை உள்ளிட்ட உடலில் பல பகுதிகளில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.