உலகம் முழுவதும் எத்தனையோ நாடுகளில் எத்தனையோ சிறைச்சாலைகள் இருந்தாலும் இந்த சிறைச்சாலை அளவுக்கு கொடூரமான ஒரு சிறைச்சாலையை பார்க்க முடியாது என்கிறார்கள் சிரியாவை தொடர்ந்து ரிப்போர்ட் செய்து வரும் பல பன்னாட்டு செய்தியாளர்கள்.
பல நாடுகளில் சிறைச்சாலைகள் இருந்தாலும், அதில் பல சிறைச்சாலைகள் கைதிகள் தப்பி செல்லாமல் இருக்க பாலைவனத்திற்கு நடுவே, தனித்தீவில் என அமைப்பது உண்டு. ஆனால் சிரியாவில் உள்ள இந்த சிறைச்சாலையை நேரில் கண்டவர்கள் மிக சொற்பமே. இந்த சிறைக்கு சென்றவர்கள் பெரும்பாலும் உயிரோடு வருவதில்லை என்கிறார்கள் சர்வதேச பத்திரிக்கையாளர்கள்.
அப்படியொரு சிறைச்சாலைதான் சிரியாவில் உள்ள சேட்னயா (Saydnaya Prison). இந்த சிறைச்சாலை சிரியாவின் தலைநகர் டெமாஸ்கஸில் இருந்து 15 கி.மீ வடக்கே பாலைவனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த சிறையை நேரில் பார்த்து இதுவரை யாரும் படம் பிடித்ததில்லை என்ற நிலையே தற்போது கிளர்ச்சியாளர்கள் குழு நாட்டை பிடிக்கும் வரை இருந்து வந்துள்ளது. கூகிள் மேப்பில் கிடைக்கும் புகைப்படத்தின் மூலமாகதான் அங்கு செயல்படும் இந்த சிறைச்சாலையே பலருக்கு தெரிய வந்துள்ளது. இந்த சிறைச்சாலைக்கு விசிட்டர்கள், வழக்கறிஞர்கள் என யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த சிறையில் பெரும்பாலும் அடைக்கப்படுபவர்கள் ஆளும் அரசுக்கு எதிராக எழுதும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் கைதிகள்தான். இங்கு அவர்களுக்கு பல நூதனமான கொடுமைகள் நடத்தப்பட்டு அவர்கள் கொல்லப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 1987ல் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலையில் பல சிறை அறைகளும் நவீனமானவை, குறிப்பிட்ட கடவுச்சொல்லை உள்ளிட்டால் மட்டுமே திறக்கும்படி செட் செய்யப்பட்டுள்ளவை.
அம்னெஸ்டி இண்டெர்நேஷனல் தரவுகளின்படி, கடந்த 2011 - 2015ம் ஆண்டிற்குள் இந்த சிறையில் வைத்து 13 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளார்களாம்.
தற்போது டெமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றியதால் அதிபர் அசாத் தப்பி சென்றுள்ளார். இதனால் இந்த சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் கிளர்ச்சி படையினர் ஈடுபட்டுள்ளனர். சிறையின் மேல் தளங்களில் இருந்த சில கைதிகளை அவர்கள் விடுவித்துள்ள நிலையில், சிறைக்கைதிகள் அளித்துள்ள வாக்குமூலம் ரத்தத்தை உறைய செய்வதாய் உள்ளது. சிறையில் பல பெண்களும் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவங்களும், மின்சாரத்தை பாய்ச்சி கொடுமைப்படுத்துவது உள்ளிட்ட பல கொடுமைகளும் அந்த சிறைச்சாலையில் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த சிறையின் பல பகுதிகளுக்கு செல்வதற்கு ரகசிய பாதாள வழிகள் அமைக்கப்பட்டுள்ளதால் அவற்றை கண்டுபிடித்து பலரை விடுதலை செய்வதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. சில சிறை அறைகளில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதை சிசிடிவி மூலமாக சிறை நிர்வாகம் கண்காணித்து வந்துள்ளது. அதில் கைதிகளை காண முடிந்தாலும் அவர்கள் எங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை கண்டறிய முடியாமல் கிளர்ச்சி படையினர் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Edit by Prasanth.K