புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிச்சடங்கு: உலக தலைவர்கள் அஞ்சலி!!

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (10:03 IST)
மறைந்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. இதையடுத்து உலகம் முழுவதும் இருந்து, ஏராளமான தலைவர்கள் அஞ்சலி செலுத்த கியூபா சென்றுள்ளனர்.

 
கம்யூனிச வரலாற்றில் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் ஆகியோர் வரிசையில் உச்சரிக்கப்படும் பெயர் ஃபிடல் கேஸ்ட்ரோ. இவர் கியூபாவில் ஆட்சி செய்த வந்த அமெரிக்க கைப்பாவையான பாடிஸ்டாவின் ஆட்சியை ஒழிக்க போராடினார். 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும் 1976 முதல் 2008ம் ஆண்டு வரை கியூபாவின் ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார். அவரது ஆட்சியை ஒழிக்க, அமெரிக்க அரசு 638 முறை காஸ்ட்ரோவை கொல்ல முயற்சித்து தோல்வியுற்றது. அமெரிக்க கடும் பொருளாதார நெருக்கடிகளை விதித்து போதும், அதிலிருந்து மீண்டு வந்து திறம்பட ஆட்சி நடத்தினார்.
 
உலகிலேயே மிகச்சிறந்த மருத்துவ வசதிகள், இலவச கல்வி, விவசாயம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை உருவாக்கி தந்தார். கடந்த 2008-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகிய ஃபிடல் காஸ்ட்ரோ, தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவை கியூபா அதிபராக்கினார். அதன்பின் அவரது உடல்நிலை வயது பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 25ஆம் தேதி இரவு அவர் காலமானார். அவரது வயது 90.
 
ஃபிடல் காஸ்ட்ரோவின் விருப்பத்திற்கிணங்க, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து கியூபாவில் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு, அவரது சாம்பல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று மாலை சாண்டியாகோவில் ஃபிடல் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ தலைமையில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
 
இந்தியாவின் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
அடுத்த கட்டுரையில்