பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படும். அளவுக்கு அதிகமாக வரும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், கூட்ட நெரிசலைச் சமாளிக்கவும், தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம்.
அதன்படி பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு நாளை சிறப்பு பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 330 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 225 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி, குளிர்சாதன வசதி கொண்ட 30 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து நாளை திருவண்ணாமலைக்கு இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.