கியூபா நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்நாட்டில் பெட்ரோல் விலை 500 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் விலை உயர்வு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந் நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கியூபா நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அமெரிக்காவின் தடை, சுற்றுலா வருவாய் இழப்பு, எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் தற்போது 500 சதவீதம் பெட்ரோல் விலையை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.456 என விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கியூபாவின் பொருளாதார நெருக்கடி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அமெரிக்க தடைகள் நீக்கப்படுவது மற்றும் உலகளாவிய பொருளாதாரம் சீரடைவது போன்ற காரணங்கள் கியூபாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என அந்நாட்டு பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.