லெபனான் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீன நாட்டில் உள்ள ஹமாஸ் படைக்கு ஆதரவாக, லெபனான் நாட்டிலிருந்து இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. இதனை குறிவைத்து, இஸ்ரேல் ராணுவம் லெபனான் பகுதியில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது. இதனால் சுமார் 3500 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், லெபனானின் ஹிஸ்புல்லா படையும், இஸ்ரேலுடன் மோதல் காரணமாக ஏற்பட்ட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர, தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த, ஒப்பந்தத்தின் படி, முதல் இரண்டு மாதங்களுக்கு முற்றிலும் சண்டை நிறுத்தப்படும். மேலும், லெபனானிலிருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேறும். அதேபோல், இஸ்ரேல் எல்லையில் இருந்து 18 மைல் தொலைவில் உள்ள லித்தானி ஆற்றுப் பகுதியில், ஹிஸ்புல்லா ஆயுதப்படைகள் வெளியேறும் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை இன்றைய தினம் ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளதாகவும், போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும், இஸ்ரேல் பிரதமர் அலுவலக வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனால், லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போருக்கு ஒரு தீர்வு கிடைத்ததாக தெரிகிறது.