அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகிய நிலையில் அதற்கான காரணம் குறித்து மனம் திறந்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் டிசம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டி வருகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் டொன்லாடு ட்ரம்ப்பும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஜோ பைடன் தான் அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். சமீபமாக ஜோ பைடனின் வயது முதிர்வு காரணமாக அவர் மேடைகளில் பலரது பெயர்களை தவறாக கூறியது உள்ளிட்ட வீடியோக்கள் வைரலாகியது. மேலும் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் ஜோ பைடனின் பெயர் அடிவாங்கியுள்ள நிலையில், அவர் விலகுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.
தான் விலகியது குறித்து மனம் திறந்துள்ள ஜோ பைடன் “அமெரிக்காவை ஒருங்கிணைக்க புதிய தலைமுறைக்கு இடம் கொடுப்பதே சரி என எண்ணி இந்த முடிவை எடுத்தேன். அடுத்த 6 மாதங்களுக்கு ஒரு அதிபராக எனது பணியை செய்வதில் கவனம் செலுத்துவேன். தீவிரவாதம் உள்ளிட்ட எந்த வன்முறைக்கும் அமெரிக்காவில் இடம் இல்லை. அமெரிக்கா பாதுகாப்பாகவும், வலிமையாகவும் உள்ளது.
கமலா ஹாரிஸ் மிகவும் திறமையானவர். துணை அதிபராக இந்த தேசத்தை வழிநடத்துவதில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர். அவருக்கு எனது நன்றிகளை கூறுகிறேன். சில மாதங்களில் அமெரிக்காவின் எதிர்காலத்தை மக்கள் தேர்வு செய்ய உள்ளனர். இனி முடிவு மக்களுடையது” என கூறியுள்ளார்.