குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை: சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
புதன், 17 ஜூலை 2019 (19:23 IST)
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதால்  குல்பூஷன் ஜாதவ் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
 
கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றிய  குல்பூஷண் ஜாதவ் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் ‘ரா’ அமைப்பிற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக அவர் ஊடுருவியதாக குற்றஞ்சாட்டிய பாகிஸ்தான் அரசு அவர் மீது வழக்கு தொடர்ந்தது. 
 
இந்த வழக்கில் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய அரசு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் ஐ.நா. அமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 
 
சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை ரத்து செய்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவிற்கு தூதரக உதவியை அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச நீதிமன்ற உத்தரவு காரணமாக குல்பூஷன் ஜாதவுக்கு  மரணதண்டனைக்கு பதிலாக வேறு தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்