துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கடவுள் தன்னை காப்பாற்றியதாகவும், சரியான நேரத்தில் தான் தலையைத் திருப்பியது எனது அதிர்ஷ்டம் என்றும் முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில், கடந்த வாரம் பென்சிலிவேனியாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காது பக்கத்தில் காயம் ஏற்பட்டு டிரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயது மேத்யூ க்ரூக்ஸ் என்ற இளைஞரை துப்பாக்கிச் சூடு நடத்தி பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின் முதல் முறையாக விஸ்கான்சின் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், அமெரிக்காவின் பாதி பகுதியில் வெற்றி கிடைக்காததால், கடந்த முறை தோல்வியுற்றேன் என்றும் இந்த முறை முழு அமெரிக்காவிற்கும் அதிபராக தான் போட்டியிடுவதாகவும் கூறினார்.
கடந்த சனிக்கிழமை தனது பேரணியில் நடந்த படுகொலை முயற்சி குறித்து கூறிய டிரம்ப், அதில் இருந்து மீண்டு வர தொடர்ந்து மக்களின் அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தியதற்காக அமெரிக்க மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். கொலையாளியின் தோட்டா தனது உயிரை பறிக்க வேண்டியதாகவும் கடவுள் தன்னை காப்பாற்றியதாகவும் டிரம்ப் கூறினார்.
சரியான நேரத்தில் தான் தலையைத் திருப்பியது எனது அதிர்ஷ்டம் என்றும் கடைசி நொடியில் தலையை அசைக்காமல் இருந்திருந்தால், அந்த தோட்டா என்னைத் தாக்கி இருக்கும், இப்போது என்னால் உங்கள் முன்பு நின்றிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். அந்த நிகழ்வை பற்றி ஒரு முறை மேல் தன்னால் சொல்ல முடியாது என்றும் அது மிகவும் வேதனையாக இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.