சீனாவில் மங்கி பி வைரசால் இறந்தவரை குறித்த விரிவான செய்தி!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (19:30 IST)
சீனாவின் பெய்ஜிங் நகரத்தில், மங்கி பி வைரஸ் (Monkey B Virus) தொற்று காரணமாக ஒருவர் இறந்த செய்தி வெளிவந்துள்ளது. இதை குளோபல் டைம்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
 
பெய்ஜிங்கில் உள்ள ஒரு கால்நடை மருத்துவர் குரங்கு பி வைரஸ் காரணமாக உயிரிழந்ததாக, குளோபல் டைம்ஸின் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், முற்றிலும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதும் அச்செய்தியில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
 
53 வயதான இந்த கால்நடை மருத்துவர் ஒரு நிறுவனத்தில் குரங்கு வகைகள் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். மார்ச் மாதத்தில் அவர் இரண்டு இறந்த குரங்குகள் குறித்து ஆராய்ச்சி செய்ததாகவும், ஒரு மாதத்திற்குப் பிறகு அவருக்கு குமட்டல் மற்றும் வாந்தி போன்ற ஆரம்ப அறிகுறிகள் ஏற்படத் தொடங்கியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
சீனாவின் மத்திய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் வாராந்திர இதழ் இது குறித்து விவரங்களை சனிக்கிழமையன்று கொடுத்தது. இந்த கால்நடை மருத்துவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார் என்றும் மே 27 ஆம் தேதி அவர் காலமானார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
 
இதுவரை இந்த வைரஸ் தொடர்பான எந்தவொரு தொற்று நிகழ்வும் தெரிய வரவில்லை. அதே போல மங்கி பி வைரஸால் மனித நோய்த்தொற்று மற்றும் இறப்பின் முதல் நிகழ்வு இது. ஏப்ரல் மாதத்தில் கால்நடை மருத்துவரின் எலும்பு மஜ்ஜையின் மாதிரியை எடுத்து சோதித்த பிறகு தான், அது குரங்கு பி வைரஸ் என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தினர்.
 
ஆனால் அவருடன் தொடர்பு கொண்ட வேறு எந்த நபருக்கும் இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகள் இதுவரை ஏற்படவில்லை என்பது நிம்மதிதரும் விஷயம். இந்த வைரஸ் 1932ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டது. இது நேரடி தொடர்பு மற்றும் உடல் திரவங்களின் பரிமாற்றம் மூலம் பரவுகிறது. மங்கி பி வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இறப்பு விகிதம் 70 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் ஆகும். மங்கி பி வைரஸ், அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும் அதைத் தடுக்க முயற்சிகள் தேவை என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்