அரசியை விட அதிக சொத்து வைத்துள்ள இந்திய பெண்! – இங்கிலாந்தில் சிக்கல்!

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (13:58 IST)
இங்கிலாந்து ராணி எலிசபெத்தைவிட அதிகமான சொத்துகளை இன்போசிஸ் நாராயணமூர்த்தி மகள் அக்‌ஷதா வைத்துள்ளது இங்கிலாந்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்போசிஸ் நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதா இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவருக்கு இங்கிலாந்தை சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்குடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. ரிஷி சுனக் இங்கிலாந்து அமைச்சரவையில் கேபினட்டில் நிதி துறையில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இவ்வாறு கேபினெட் அந்தஸ்தில் இருப்பவர்கள் தங்கள் மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இந்நிலையில் ரிஷி சுனக் தனது மனைவி அக்‌ஷதா நடத்தி வரும் காட்மாரன் வென்சர்ஸ் நிறுவனத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அக்‌ஷதாவுக்கு அவரது அப்பாவின் இன்போசிஸ் நிறுவனத்தில் உள்ள பங்குகளின் மதிப்பு சுமார் 4200 கோடி ஆகும். இதுமட்டுமல்லாமல் அமேசான் இந்தியா உள்ளிட்ட வேறு சில பன்னாட்டு நிறுவனங்களிலும் அக்‌ஷதாவிற்கு பங்குகள் உள்ளது. அக்‌ஷதாவின் மொத்த சொத்து மதிப்பானது இங்கிலாந்து ராணி எலிசபத்தின் சொத்து மதிப்பை விட அதிகம் என கூறப்படுகிறது.

இதனால் ரிஷி சுனக் தன் மனைவியின் சொத்து மதிப்புகளை தெளிவாக சமர்பிக்கவில்லை என இங்கிலாந்து எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதால் அவருக்கு சிக்கல் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்