இறக்கையுடன் கூடிய டைனொசரின் படிமங்கள் கண்டுபிடிப்பு

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2015 (15:39 IST)
இறக்கைகள் கொண்டிருந்த மிகப்பெரிய டைனொசர் ஒன்றின் எஞ்சியுள்ள படிமங்களை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் நீளத்துடன் ,மிக வேகமாக ஓடக்கூடிய திறனை கொண்டிருந்த இந்த வகை டைனொஸர்கள் விலங்குகளை உண்டு வாழ்ந்தவை.
 
வடகிழக்குச் சீனாவில் எரிமலை ஒன்று திடீரென வெடித்ததன் காரணமாக, இந்த உயிரினம் அப்படியே புதையூண்டிருந்தது.
இந்த டைனோசருக்கு ஜென்யுவான்லாங் என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். ஜின்ஜௌவிலிருந்த அருங்காட்சியகத்திற்கு இந்தப் படிமத்தை அளித்த நபரின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
இவற்றின் இறக்கைகள், கழுகு, வல்லூறு ஆகிய பறவைகளின் இறக்கைகளை ஒத்திருந்தன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த டைனொஸர்கள் பறந்திருக்க வாய்ப்பில்லை என்றும் முட்டைகளை அடைகாக்கவும் காட்சிக்காகவும் பயன்படுத்தியிருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
சுமார் 125 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இந்த டைனொஸர்கள், ஜுராஸிக் பார்க் படங்கள் மூலம் அறியப்பட்ட வெலாசிரப்டர் டைனொசர் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது.