வாரிசா? துணிவா? டாஸ் போட்டு தேர்ந்தெடுத்த திரையரங்கம்! ஓகே சொன்ன ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (10:02 IST)
வாரிசு, துணிவு படங்கள் நாளை வெளியாக உள்ள நிலையில் எந்த படத்தை திரையிடுவது என ரசிகர்கள் முன் டாஸ் போட்டு முடிவெடுத்த சம்பவம் வைரலாகியுள்ளது.

பொங்கலை முன்னிட்டு அஜித் நடித்த ‘துணிவு’ படமும், விஜய் நடித்த ‘வாரிசு’ படமும் நாளை ஒரே நாளில் வெளியாகிறது. 2014க்கு பிறகு இருவர் படமும் ரிலீஸாகி மோதிக் கொள்வதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேசமயம் வாரிசு, துணிவு படங்களுக்கு தியேட்டர் ஒதுக்குவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. சில இடங்களில் அஜித், விஜய் ரசிகர்கள் ஊரில் உள்ள பெரிய திரையரங்குகளில் தங்கள் விருப்ப நடிகரின் படம்தான் திரையிட வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களிடம் நேரில் சென்று வாக்குவாதம் செய்து வருகின்றனர்.

மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் பெரிய ஸ்க்ரீன் யாருக்கு? சின்ன ஸ்க்ரீன் யாருக்கு? என்பதிலும் குழப்பம், வாக்குவாதம் தொடர்கிறது. பிரபல மல்டிப்ளெக்ஸ் திரையரங்கம் ஒன்றில் இரண்டு பெரிய ஸ்க்ரீன்களும், ஒரு சின்ன ஸ்க்ரீனும் உள்ளது.



இரண்டு பெரிய ஸ்க்ரீன்களிலும் ஒன்றில் வாரிசு, மற்றொன்றில் துணிவு திரையிடுவது என முடிவெடுக்கப்பட்டது. மீதமுள்ள சின்ன ஸ்க்ரீன் யாருக்கு என்பதில் விஜய், அஜித் ரசிகர்களிடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. பின்னர் டாஸ் போட்டு வெல்பவர்களுடைய படம் திரையிடலாம் என திரையரங்க நிர்வாகிகள் யோசனை சொல்லியுள்ளனர்.

விஜய், அஜித் ரசிகர்களும் அதற்கு உடன்பட்டு டாஸ் போட்டு பார்த்ததில் அஜித் ரசிகர்கள் வென்றனர். இதனால் மூன்றாவது ஸ்க்ரீனில் துணிவு திரையிடப்படுவதாக முடிவான நிலையில் அதை விஜய் ரசிகர்களும் ஏற்றுக் கொண்டு அஜித் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அஜித் – விஜய் ரசிகர்கள் எந்த சண்டையும் இல்லாமல் இவ்வாறாக திரையரங்கை பங்கிட்டு கொண்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்