தல 59 பிங்க் ரீமேக்! - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (15:05 IST)
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், பிங்க் தமிழில் ரீமேக் ஆவதை படத்தின் இந்தி தயாரிப்பாளர் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். 
 
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கியவர் எச்.வினோத். இந்த  இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன. 
 
இந்நிலையில் இவர் தற்போது அஜித்தை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் திரைப்படத்தின் ரீமேக்காக இது இருக்கும் என்றும், இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ‘பிங்க்’ படத்தின் தயாரிப்பாளர் ஷிஜித் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
 
கோவா திரைப்பட விழாவில் பேசிய அவர், “பிங்க் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ள தகவல் உண்மைதான். படம் தயாரான பிறகு அதை என்னிடம் காண்பிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் அஜித்தின் அடுத்த படம் பிங்க் ரீமேக்காக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
 
தமிழில் ரீமேக் செய்தாலும் இந்தி படத்தின் காட்சிக்கு காட்சி ரீமேக் செய்யப்படாது என்றும், தமிழுக்கு ஏற்றவகையில் காட்சிகளை வைத்தே படம் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
 
2019-ன் இரண்டாம் பாதியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டிருக்கும் இப்படத்துக்கு, இசையமைக்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்