தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா, பொற்காலம் மற்றும் ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்கள் மூலமாக முத்திரைப் பதித்தவர் இயக்குனர் சேரன். ஆட்டொகிராப் திரைப்படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமாகி, பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு படங்கள் இயக்க வாய்ப்புகள் அமையவில்லை.
இந்நிலையில் அவர் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான பாமக நிறுவனர் ராமதாஸின் வாழக்கை வரலாற்றுப் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த படத்தில் ராமதாஸ் வேடத்தில் சரத்குமார் நடிப்பார் என்றும், லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அதன் பிறகு அடுத்தகட்டத்துக்கு எதுவும் நகரவில்லை. இதையடுத்து படத்தில் இருந்து சரத்குமார் வெளியேறிவிட்டதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு அந்த படம் எடுக்கும் முடிவை லைகா நிறுவனம் கைவிட்டுவிட்டதாக தகவல்கள் பரவின.
இந்நிலையில் இப்போது அந்த படத்தை லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தமிழ்க் குமரன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலமாக தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ்க் குமரன் பாமகவில் முக்கியப் பொறுப்பிலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.