தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களை வைத்து படங்கள் மற்றும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என இரண்டு பாதைகளிலும் வெற்றிகரமாக செயல்படுபவர் எஸ் ஆர் பிரபு. ஒரு பக்கம் சூர்யா மற்றும் கார்த்தியின் படங்களைத் தயாரித்தாலும் மறுபக்கம் அருவி, மாயா போன்ற படங்களையும் தயாரித்து வருபவர். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அவர் சில ஆண்டு காலம் பொருளாளராகவும் இருந்துள்ளார். தமிழ் சினிமாவின் வியாபார நிலைமை குறித்து அவர் அவ்வப்போது தன்னுடையக் கருத்துகளை பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அவர் பகிர்ந்துள்ள ஒரு பதிவு ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “ஒரு தொழில்முறையிலான குழுவை வைத்துக்கொண்டு படத்த எடுப்பதற்கான செலவு கோவிட்டுக்கு பிறகு மூன்று மடங்கு அதிகமாகியுள்ளது. நல்ல திரைப்படங்களுக்கே திரையரங்கில் ரசிகர்களின் வருகை குறைந்து வருகிறது. ஒரு திரைப்படத்தின் பெரும்பாலான வருவாய் இப்போது திரையரங்குகளுக்கு வெளியே உள்ளது. இதுவும் மாற்றத்தின் பகுதிதான் என்றாலும், சிறந்தவையே தப்பி பிழைக்கும் #Tamilcinema” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.