லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தின் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த 13 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வருகிறது. இதுவரை 250 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. திரையரங்குகள் மூலமாக கிட்டத்தட்ட 300 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சென்னையில் படத்தின் சக்ஸஸ் மீட் நடந்த நிலையில் அதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “படம் வெளியாகி ஹிட்டானதும், கமல் சார் எனக்கு போன் செய்து பேசினார். படம் ஹிட்டாயிடுச்சுன்னு ஓய்வு எடுத்துவிடாதே. ஆஃபிஸூக்கு சென்று அடுத்த பட வேலையை பார் என்று கூறினார். அதைதான் நான் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்கிறேன். அடுத்த படத்தை ஏனோ தானோவென்று எடுக்க மாட்டேன். கூடுதல் பொறுப்புடன் நீங்கள் கொடுத்த கூடுதல் நம்பிக்கையுடனும் எடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.
அதன் பின்னர் பேசிய படத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் கமல்ஹாசன் “கடந்த 10 வருடத்தில் என் நடிப்பில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸான முதல் படம் விக்ரம். எல்லோரும் நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றபோது சின்னதிரைக்கு செல்லாதீர்கள் என்றார்கள். எனக்கும் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. ஆனால் இப்போது அந்த சந்தேகம் இல்லை. ஏனென்றால் நானும் நடிக்கிறேன் என்று அவ்வப்போது ஞாபகப் படுத்த வேண்டியுள்ளது. மறதி ஒரு தேசிய வியாதி என என் படத்திலேயே வசனம் வைத்திருந்தேன்” எனப் பேசியுள்ளார்.