நடந்து கொண்டிருக்கும் ஜெய் பீம் சர்ச்சை குறித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். ஓடிடியில் வெளியான இந்த படம் இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை பதிவு செய்துள்ளதாக பரவலாக நல்ல பாராட்டையும், விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில், வன்னியர் சங்கத்தின் அடையாளமான அக்னி சட்டியை இழிவுபடுத்தி விட்டதாக வன்னியர் சங்கத்தினரும் பாமகவினரும் சூர்யாவுக்கு எதிராக விமர்சனங்களை வைத்துள்ளனர். விமர்சனங்கள் ஒரு கட்டத்தில் வன்முறையை தூண்டும் வார்த்தைகளாகவும் வெளிப்பட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் முன்னாள் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திரைப்படங்களில் சர்ச்சையானக் காட்சிகள் வருவதும் அதை நீக்குவதும் இயல்பானதுதான். எங்கள் ஆட்சியில் கூட சர்க்கார் படத்தில் சில காட்சிகள் இருந்து பின்பு அது பேச்சுவார்த்தையின் மூலம் சரி செய்யப்பட்டது. அதுபோல ஜெய்பீம் சர்ச்சை எழுந்த போது அதைப் படக்குழுவினர் நீக்கிவிட்டனர். அதனால் பிரச்சனை முடிந்துவிட்டதாகக் கருதவேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் பிரச்சனையை உருவாக்கி சமூகத்தில் ஒரு சர்ச்சையை உருவாக்கும் விதமாக நாம் செயல்படக் கூடாது. எனக் கூறியுள்ளார்.