ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண் இணையத்தில் பாடிய பாடலை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுப் பாராட்டியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
சில நாள்களுக்கு முன்னதாக கேரளாவைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் `விஸ்வரூபம்' படத்தில் இடம்பெற்ற `உன்னைக் காணாத...' பாடலைப் பாடியிருந்தார். இவரின் பாடல் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த வீடியோவை பாடகர் சங்கர் மகாதேவன் ட்விட்டரில் வெளியிட்டு, `இவர் யார் என்று தெரியவில்லை. ஆனாலும் இவரின் குரல் எவ்வளவு இனிமையாக உள்ளது' என்று பதிவிட்டிருந்தார்.
சங்கர் மகாதேவன் பதிவிட்டதை அடுத்து ராகேஷை தேடும் பணியில் பலர் ஈடுபட்டு இறுதியில் அவரைக் கண்டுபிடித்தனர். இதன் பிறகு ராகேஷை நடிகர் கமல் நேரில் வரவழைத்துப் பாராட்டினார்.
இதேபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த முறை வீடியோ பதிவிட்டுள்ளது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் வடிசலேறு பகுதியைச் சேர்ந்த பேபி என்ற பெண் 1994-ம் ஆண்டு பிரபுதேவா நடித்து ரஹ்மான் இசையில் வெளியான `காதலன்' திரைப்படத்திலிருந்து, என்னவளே... என்னவளே... பாடலை (தெலுங்கில்) பாடியிருந்தார். இந்தப் பாடல் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ஏ.ஆர். ரஹ்மான் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து 'அருமையான குரல்’ என்று பாராட்டியுள்ளார்.
மேலும் சிலர் அந்தப் பெண்ணுக்கு உங்கள் இசையில் பாட ஒரு வாய்ப்பு கிடைக்குமா. வாய்ப்பு தரவேண்டும். அவரின் எதிர்காலத்தை மாற்ற வேண்டும் என்பது போன்ற கருத்தையும் பதிவிட்டுள்ளனர்.
தற்போதுஇந்த பெண்ணுக்கு பிரபல தெலுங்கு இசைமைப்பாளர் திரைப்படத்தில் பாட வாய்ப்பு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.