விக்ரம் நடிப்பில் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படம் நேற்று ரிலீஸாக இருந்த நிலையில் படம் சம்மந்தமான ஒரு வழக்கால் ரிலீஸுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்த படத்தில் முதலீடு செய்திருந்த IVY என்ற நிறுவனத்துக்கு அவர் டிஜிட்டல் உரிமையைக் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ்
ஆனால் அந்நிறுவனம் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்வதற்குள்ளாகவே ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் அறிவித்துவிட்டதாகவும் அதனால் தங்களால் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்ய முடியவில்லை என்றும் அந்நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால தடையை நேற்று அறிவித்தது. இதையடுத்து நேற்று காலை காட்சி மற்றும் மதியக் காட்சி இந்த படம் ரிலீஸாகவில்லை.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு தயாரிப்பாளர் அளிக்க வேண்டிய பணத்தைத் தானே பொறுப்பேற்று விக்ரம் அளித்த பின்னர்தான் நீதிமன்ற தடை விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்துக்கு விக்ரம்மின் சம்பள பாக்கி உள்ளதாக சொல்லப்படும் நிலையில் தற்போது வாங்கிய சம்பளத்தையும் அவர் விட்டுக்கொடுத்துள்ளார் என்பது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.