சிம்பு படத்துக்கு இசையமைக்கும் ஏ ஆர் ரஹ்மான் – எல்லாம் இயக்குனரால் நடந்த மாற்றம்!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (15:15 IST)
நடிகர்கள் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

இளையதலைமுறை நடிகர்களில் அதிக ரசிகர்களை கொண்டவர்களில் சிம்புவை போல் ஒரு நடிகர் இல்லை என்றே கூறலாம். ஆனால் அவர் தனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக திரைப்படங்கள் கொடுப்பதில் தவறி வருகிறார். சிம்பு ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி விட்டார் என்றால் அந்த படத்தின் படப்பிடிப்பிற்கு அவர் சரியாக செல்ல மாட்டார் என்று பல வருடங்களாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த தவறை சிம்பு இப்போதும் திருத்திக் கொள்வதாக தெரியவில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் ஞானவேல்ராஜா தயாரிக்கும் முஃப்தி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமான சிம்பு, சரியான நேரத்தில் படப்பிடிப்பிற்கு வராததால் இந்த படமே டிராப் செய்யப்பட்டு விட்டதாக ஞானவேல்ராஜா அறிவித்தார். ஆனால் இப்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க உள்ளாராம் ஞானவேல் ராஜா. ஆனால் முன்பு படத்தை இயக்கிய நரதன் அந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம்.

அவருக்கு பதிலாக ஜில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா மீதிப் படத்தை இயக்க உள்ளாராம். இந்நிலையில் மாநாடு படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தில் கவனம் செலுத்த உள்ளாராம் சிம்பு. இதற்காக படக்குழுவினருடன் மாலத்தீவுகளுக்கு செல்ல உள்ளாராம். அங்கே மொத்தமாக சிம்பு நடிக்கும் காட்சிகளை எடுத்து முடிக்க உள்ளது படக்குழு. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்துக்கு பத்து தல எனப் பெயர் வைக்கப்பட்டு பத்து இயக்குனர்கள் தலைப்பை வெளியிட்டனர்.

இதையடுத்து இந்த படத்தைப் பற்றிய முக்கிய செய்தியாக ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளாராம். இயக்குனர் கிருஷ்ணாவும் ரஹ்மானும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இந்த படத்துக்கு சிம்பு ஒத்துக் கொண்டுள்ளாராம். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்