நடிகர் சங்கம் மணிமண்டபம் கட்டாதது அவமானம் - விஷால் பேட்டி

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (19:28 IST)
சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியானதும் பத்திரிகையாளர்களை சந்தித்தது விஷால் அணி. நடிகர் சங்கம் குறித்தும், தங்களுக்கு ஆதரவு தருகிறவர்கள் குறித்தும் விஷால் பகிர்ந்து கொண்டார். எச்சரிக்கையும், அனுபவமும் தெரிகிறது அவரது பதில்களில். 
 

 
சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறாரே?
 
மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவிச்சிக்கிறோம். 2002இல் மணிமண்டபம் கட்ட நிலம் கொடுக்கப்பட்டது. 2015இல் அதில் மணிமண்டபம் வரப்போகுதுன்னு அறிவிச்சிருக்காங்க. தமிழக அரசு அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறது. ரொம்ப ரொம்ப சந்தோஷம். இது ஒரு நடிகனுக்கு கொடுக்கிற மரியாதையாக இல்லாமல் நடிப்புக்கு கொடுக்கிற மரியாதையாக நாங்க நினைக்கிறோம்.
 
இவ்வளவு வருடம் கழித்து அறிவிப்பு வந்திருக்கே?
 
அவங்க செய்தியிலேயே தெளிவா சொல்லிருக்காங்க. நடிகர் சங்கத்தால் மணிமண்டபம் கட்ட முடியாதுன்னு சொல்லியிருந்தால் அரசு நடவடிக்கை எடுத்திருக்கும். ஆனா, நடிகர் சங்கம் அப்படி சொல்லலை. பத்து வருஷங்களுக்கு மேலாக கொடுக்கப்பட்ட இடம் அப்படியே சும்மாவே இருந்தது. அதனால் இப்போ தமிழக அரசே அதை கட்ட முன்வந்திருக்கு. நடிகர் சங்கத்தின் இன்எபிலிட்டிதான் இதுக்கு காரணம்.
 
நடிகர் சங்க நிர்வாகிகளை எதிர்த்து அடிக்கடி கோர்ட்டுக்கு போறீங்களே?
 
கோர்ட்டுக்கு போக அவங்கதான் ஒவ்வொருமுறையும் எங்களை தள்றாங்க. கோர்ட்டுக்கு போகணும்னு எங்களுக்கு விருப்பமில்லை. நாலு சுவருக்குள்ள முடிக்க வேண்டிய விஷயங்கள். நாங்க என்ன கேட்டோம்? ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்ல எலெக்ஷன் நடத்துங்க. உறுப்பினர் பட்டியலை வெளியிடுங்க. அதுதானே கேட்டோம்? பதில் தரலைங்கிற போது கோர்ட்டுக்கு போனோம்.
 
குமரி முத்து, பூச்சி முருகன் உள்ளிட்டவர்களை மீண்டும் சங்கத்தில் சேர்த்திருப்பது பற்றி..?
 
அவங்களும் கோர்ட்டுக்கு போய்தான் இதை சாதிச்சிருக்காங்க. அவங்க இப்போ மீண்டும் சங்கத்துக்குள்ள வந்திருக்காங்கன்னா அவங்க பக்கம் நியாயம் இருக்குன்னு தெரியுது.
 
மணிமண்டப அறிவிப்பை கேட்டது என்ன தோன்றியது? 
 
அறிவிப்பை கேட்டதும் சந்தோஷமாக இருந்தது. ஆனா, இதை நடிகர் சங்கம் செய்திருக்கணும். செய்யாதது, ஓபனா சொல்றேன், நடிகர் சங்கத்துக்கு அவமானம்.
 
மணிமண்டபத்துக்கு நிலம் தரப்பட்டபோது சங்கத் தலைவராக விஜயகாந்த் இருந்தார். நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு அவரையும் சேர்த்ததா?
 
நடிகர் சங்கம் மணிமண்டபம் கட்டியிருக்கணும். அதை செய்யலை. அதுக்காக வருத்தப்படுறோம். இப்போ அரசாங்கம் கட்ட முன் வந்திருக்கு. அதுக்கு பெருமைப்படுறேnம். அவ்வளவுதான். சரத்குமார், ராதாரவின்னு பெயர் குறிப்பிட்டு எல்லாம் எதுவும் நாங்க சொல்ல வரலை. நடிகர் சங்கம் செய்யலை அவ்வளவுதான்.
 
குஷ்பு, விவேக், மனோபாலா போன்றவர்கள் விஷால் அணிக்கே எங்கள் ஓட்டுன்னு சொல்லியிருக்காங்களே...?
 
தனிப்பட்ட முறையில அவங்க சொல்லும் போது சந்தோஷப்படுறோம். நாங்க எல்லா உறுப்பினர்களையும் சந்திக்கிறோம். ஓட்டு போடுங்கன்னுதான் கேட்கிறோமே தவிர எங்களுக்கு ஓட்டுப் போடுங்கன்னு கேட்கலை. ஆனா, அவங்க எங்களை விஷால் அணின்னு சொல்லும் போது ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு, சந்தோஷமாக இருக்கு. ஏன்னா அவங்க விஷாலுக்காக இதை சொல்லலை. இந்த அணி ஏதோ நல்லது செய்யப் போறாங்க, ஏதோ மாற்றம் கொண்டு வரப்போறாங்கங்கிற நம்பிக்கையில் சொல்றாங்க.
 
பாயும் புலி படத்துக்கு தடை விதிச்சிருக்காங்களே?
 
நான் அந்தப் படத்தோட தயாரிப்பாளர் கிடையாது. வேற ஒருத்தர். அவங்க அதுக்கான வேலையில இறங்கிட்டாங்க. பேச்சுவார்த்தை நடக்கயிருக்கு. சுமுகமா முடியும்னு நம்புகிறேன்.