சவுதி அரேபியாவில் திருமணத்துக்கு வெளியில் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் தொடர்பான வழக்கு விசாரணையை மீண்டும் நடத்துவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது.
அந்தப் பெண்ணை கற்களால் அடித்துக்கொல்ல வேண்டும் என்று நான்கு மாதங்களுக்கு முன்னர் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அவர் மீதான வழக்கு விசாரணை மீண்டும் நடக்கவுள்ளதாக இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஷரியா சட்டத்தின்படி, திருமணத்துக்கு வெளியிலான பாலியல் உறவுக் குற்றத்தை மதிப்புமிக்க நான்கு முஸ்லிம்கள் நிருபிக்க வேண்டும் என்ற தேவை உள்ள நிலையில், இந்தப் பெண்ணின் விடயத்தில் அந்த விதி பின்பற்றப்படவில்லை என்று இன்னொரு இலங்கை அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஆணுக்கு 100 கசையடிகள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இருவரும் குற்றவாளிகளாக காணப்பட்ட பின்னர் தான் தங்களுக்கு இந்த விவகாரம் பற்றி தெரியவந்ததாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்கவுள்ளதாகவும் இலங்கை தெரிவித்துள்ளது