விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர் பேபி சுப்பிரமணியம் தாயார் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:-
விடுதலைப் புலிகளின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரும், தேசியத் தலைவர் மேதகு தலைவர் பிரபாகரனின் முழு நம்பிக்கைக்கும் உரியவரான பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரனின் தாயார் செல்வநாயகி நடராஜா, கடந்த 19 ஆம் தேதி அன்று இரவு யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் மறைந்தார் என்ற செய்தி அறிந்து தாங்க முடியாத மனவேதனை அடைந்தேன்.
அன்புச் சகோதரர் பேபி சுப்பிரமணியத்தைத் தமிழகத்தில் உள்ள ஈழஉணர்வாளர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். கசங்கிய அழுக்குச் சட்டையும், ஒரு நான்கு முழ வேட்டியும் அணிந்து கொண்டு, எளிமையின் வடிவமாக, ஈழத் தமிழர்களின் விடியலுக்காக தன்னையே அற்பணித்துக் கொண்டவர்.
தமிழ் ஈழத்தில் சீருடை அணிந்து ஆயுதமும் ஏந்தி, தலைவர் தந்த முக்கியப் பொறுப்பை செயல்படுத்தியவர். கட்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் துயரம் நிகழ்ந்த சூழலில் சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டார் பேபி சுப்பிரமணியம்.
அவரோடு பாலகுமார், கவிஞர் புதுவை இரத்தினதுரை, யோகி போன்றோர் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டு இருக்கக்கூடும் என்ற அதிர்ச்சி கலந்த அச்சமும் அவ்வப்போது நெஞ்சில் எழுகிறது. அவர் உயிருடன் இருக்கின்றாரா என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.
பேபி சுப்பிரமணியத்தின் அண்ணன் ஏற்கனவே சிங்கள இராணுவ பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது தங்கைதான் அவர்களது தாயாரைப் பராமரித்து வந்ததாக அறிந்தேன்.
இருள் மூழ்கிக் கிடக்கும் ஈழத்தமிழர் வாழ்வில் விடியல் உதிக்காதா என்று ஈழத் தமிழரெல்லாம் ஏங்கித் தவிக்கும் இந்த வேளையில், பேபி சுப்பிரமணியத்தை பெற்றெடுத்த வீரத்தாயின் மறைவுக்கு மதிமுக சார்பில் கண்ணீர் அஞ்சலியையும், வீர வணக்கத்தையும் தெரிவிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.