3 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இங்கிலாந்து கிளப் கிரிக்கெட் அணி!

Webdunia
திங்கள், 28 ஏப்ரல் 2014 (14:39 IST)
இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் அல்லாது நிறைய லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இதில் 3வது டிவிஷன் லீக் அணியான விரால் என்ற அணி ஹேஸ்லிங்டன் என்ற அணிக்கு எதிராக வெறும் 3 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த 3 ரன்னில் 2 லெக்-பைகள். 10 பேட்ஸ்மென்கள் ரன் எடுக்காமல் 0-வில் அவுட் ஆகியுள்ளனர்.
 
11ஆம் நம்பர் வீரர், அணியின் மோசமான வீரராக கருதப்படும் கானர் ஹட்சன் என்பவர் 1 ரன் எடுத்தார். இதுதான் பேட்டில் வந்த ரன். 3 ரன்களே அதிகம்தான். ஏனெனில் ஒரு நேரத்தில் ரன் எதுவும் எடுக்காமலேயே 8 விக்கெட்டுகள் அம்பேல் ஆனது. 10 ஓவர்களுக்கும் கொஞ்சம் அதிகமான ஓவர்களே இந்த இன்னிங்ஸிற்கு தேவைப்பட்டது.