அடி மேல் அடி வாங்கும் இந்தியா - என்ன செய்கிறார் தோனி?

அ.லெனின் அகத்தியநாடன்
வெள்ளி, 22 ஜனவரி 2016 (10:30 IST)
தென் ஆப்பிரிக்காவுடனான 4 போட்டிகள் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற தெம்போடு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அடிமேல் அடிவாங்கிக்கொண்டு இருக்கிறது.
 

 
முதல் ஒருநாள் போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி 309 ரன்கள் குவித்தது. இதில் ரோஹித் சர்மா 171 ரன்களும், விராட் கோலி 91 ரன்களும் குவித்தனர். ஆனால், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி 49.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
 
21 ரன்களை குவிப்பதற்குள் முக்கிய 2 விக்கெட்டுகளை இழந்தபோதும், கேப்டன் ஸ்மித் [149] மற்றும் ஜார்ஜ் பெய்லி [112] ஆகியோர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின் 9 ஓவர்கள் வீசி 68 ரன்கள் [சராசரி 7.55] விட்டுக்கொடுத்தார்.
 
இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் முதலில் ஆடிய இந்திய அணி 308 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 124 ரன்களும், ரஹானே 89 ரன்களும் குவித்தனர். 43ஆவது ஓவரில் 250 ரன்கள் குவித்த இந்திய அணியில், பின்கள் வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் பெரிய அளிவில் ரன் குவிக்க முடியாமல் போனது.
 
பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. ஆரோன் பிஞ்ச் [71], மார்ஸ் [71], கேப்டன் ஸ்மித் [46], ஜார்ஜ் பெய்லி 76] ரன்கள் குவித்தனர்.
 
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது.
 
தொடர்ந்து 3ஆவது ஒருநாள் போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் [68], விராட் கோலி [117], ரஹானே [50] ஆகியோர் சிறப்பான பங்களிப்பை செலுத்தினர்.
 
பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 48.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. மார்ஷ் [62], கேப்டன் ஸ்மித் [41], மேக்ஸ்வெல் [96] ரன்கள் குவித்தனர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்ததோடு தொடரையும் கைப்பற்றியது.
 
இந்நிலையில், புதன் கிழமை 4ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 348 ரன்கள் குவித்தது. பின்னர் தொடர்ந்து ஆடிய இந்திய அணி ஒரு கட்டத்தில், 37.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.
 
மேற்கொண்டு 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய கேப்டன் தோனி 3 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி வெளியேறி தோல்வியை துவக்கி வைத்தார்.
 
தொடர்ந்து வந்த வீரர்களில் ஜடேஜா [24] தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இதனால், ஆஸ்திரேலியா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
தோல்வி குறித்து கூறிய தோனி, “எனது விக்கெட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது. ஏனென்றால், அந்த நிலையில், ஆட்டத்தை இனிதாக நிறைவு செய்யும் பணியை சிறப்பாக செய்திருக்க வேண்டும். அதனை தொடர்ந்து சில விக்கெட்டுகளை இழந்ததும் காரணம்" காரணம் கூறியிருந்தார்.
 
தோனியின் செயல்பாடு நான்கு போட்டிகளிலும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. தோனி 4 போட்டிகளிலும் சேர்த்து 52 ரன்கள் [சராசரி 13.00] மட்டுமே சேர்த்திருக்கிறார். ஆனால், அதே சமயம் ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 4 போட்டிகளில் விளையாடி 287 ரன்கள் [சராசரி 71.75] குவித்துள்ளார்.
 
இத்தனைக்கும் நான்கு போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்திருந்தனர். யாரேனும் ஒரு வீரர் சதத்தை நிறைவு செய்திருந்தனர். ஆனாலும் தோனி கடைசி கட்டத்தில் அதிரடியாக ரன் குவிக்க தவறினார்.
 
3ஆவது ஒருநாள் போட்டியில் 295 ரன்களை துரத்திய ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 215 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால், மேக்ஸ்வெல் அதிரடியாகவும், பொறுப்புடனும் ஆடி 83 பந்துகளில் 96 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். அப்படிப்பட்ட ஆட்டத்தை இந்திய அணியில் காண முடியவில்லை.
 
அதேபோல், பிரட் லீ சொன்னதுபோல் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தக்கூடிய சிறந்த பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லை.
 
3ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் ஜான் ஹாஸ்டிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், 4ஆவது ஒருநாள் போட்டியில் கனே ரிச்சர்ட்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
அதுபோன்ற பந்துவீச்சு இந்திய அணி வீரர்களிடம் இல்லை. இந்திய பந்துவீச்சாளர்களில் அதிகப்பட்சமாக இஷாந்த் சர்மா மட்டும் 4ஆவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
 
அதுபோல 4ஆவது ஒருநாள் போட்டியில் ஃபீல்டிங்கிலும் இந்திய அணி கோட்டை விட்டது. இதுபோன்ற பல குறைகளால் இந்திய அணி வெற்றியை நெருங்கியும் தொட முடியவில்லை. ஆனால், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நான்கு ஒருநாள் போட்டியிலும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
 
தவறை சரிசெய்து கொண்டு இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா? தோனி கடைசிப் போட்டியிலாவது ரன் குவித்து வெற்றிக்கு அழைத்து செல்வாரா என்பதை நாளை பொறுத்திருந்து பார்க்கலாம்.