பைரவரை தினமும் வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன...?

Webdunia
பைரவருக்கு செய்யும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும் வெவ்வேறு தனித்தன்மை வாய்ந்த பலன்கள் உண்டு. பைரவரை வணங்கும் பொழுது வாரத்தின் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை: பிரதி ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு வடை மாலை சாற்றி, ருத்ராபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். கடன் தொல்லைகள் தீரும். மேலும் பைரவருக்கு புனுகு சாத்தி, முந்திரி பருப்பு மாலை சாற்றி வழிபட்டால் நலன் பெருகும்.
 
திங்கட்கிழமை: திங்கட்கிழமை அன்று வில்வம் கொண்டு பைரவரை அர்ச்சித்தால் சிவனருள் கிடைக்கும். மேலும் சங்கடஹர சதுர்த்தி அன்று பைரவருக்கு பன்னீர்  அபிஷேகம் செய்து, சந்தன காப்பு மற்றும் புனுகு சாத்தினால் கண் சம்மந்தப்பட்ட நோய்கள் விலகித் தெளிவான பார்வை கிடைக்கும்.
 
செவ்வாய்க்கிழமை: செவ்வாய்க்கிழமை அன்று மாலை நேரத்தில் மிளகு தீபம் ஏற்றி வந்தால் நாம் இழந்த பொருளைத் திரும்பக் கிடைக்கும்படி அருள் புரிவார்  பைரவர்.
 
புதன்கிழமை: பூமி லாபம் கிடைக்க பிரதி புதன்கிழமை பைரவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
 
வியாழக்கிழமை: பைரவருக்கு பிரதி வியாழக்கிழமை அன்று மனமார விளக்கேற்றி வழிபட்டால் ஏவல், பில்லி மற்றும் சூனியம் விலகி மன நிம்மதி கிடைக்கும்.
 
வெள்ளிக்கிழமை: வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரங்களில் வில்வ இலைகள் கொண்டு பைரவருக்கு அர்ச்சனை செய்து வந்தால் செல்வம் பெருகும்.சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
 
சனிக்கிழமை: சனி பகவானுடைய குரு பைரவர். ஆகவே சனிக்கிழமைகளில் இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச்சனி  ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து விடுபட்டு நன்மைகளை அடையலாம்.
 
இவ்வாறு வாரத்தின் ஏழு நாட்களும் நாம் செய்யும் கால பைரவரின் வழிபாடு மற்றும் பைரவ அஷ்டக பாராயணம் நமக்கு நினைத்த காரியங்களை நிறைவேற்றி திருமணத் தடைகளை நீக்கி சகல நன்மைகளைத் தரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்