சித்திரை மாதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்ன...?

சித்திரையில் வரும் மேஷ ராசி தொடங்கி கால புருஷன் இயங்குகிறான். மக்கள் வாழ்க்கை, பிறப்பு, இறப்பு என எல்லாவற்றையும் இயக்குகிறவன் இந்தக் கால புருஷன் ஆவான். மக்களை ஆள்வதால் வருடத்துக்கு “ஆண்டு” என்று பெயர். 

12 மாதங்களும் அந்த கால புருஷனின் உடல் உறுப்புகளாகச் சித்தரிக்கப்படுகின்றன. மனிதனைப் பீடிக்கும் நோய் நொடி போன்றவை எல்லாம் அந்தந்த மாதத்தில்  அந்தந்த உறுப்புகளில் ஏற்படுகிறது. வெயில் அதிகமான சித்திரையில் அவனது தலை இருக்கிறது. வெயில் காரணமாக வரும் தலை வலி, மயக்கம் போன்றவை  பீடிக்கும் மாதம் அது. 
 
சித்திரை மாதம் மேஷ ராசியில் சூரியன் நுழையும் நேரம் ‘ஜக லக்னம்’ எனப்படுகிறது. உலகத்தின் லக்னம் என்பது பொருள். உலக நடப்புகளை அதைக்  கொண்டுதான் சொல்ல முடியும். சாதாரண மக்களுக்குப் பிறந்த லக்னமும், சந்திர லக்னமும் முக்கியம். அது போல உலகத்துக்குச் சூரிய லக்னம் முக்கியம். அதைக்  கொண்டு ஒரு நாட்டுக்குப் பலன் சொல்ல முடியும்.
 
‘நவ நாயகர்கள்’ என்று ஒரு ‘மந்திரி சபையே’ சித்திரை வருஷப் பிறப்பின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. அதனால் பஞ்சாங்கம் படிப்பது வருஷப்பிறப்பின்  முக்கிய அம்சமாகும். 
 
சித்திரை வருஷப் பிறப்பைப் பொறுத்தே, நாடு, மக்கள், பிற உயிரினங்கள், விலை வாசி, விவசாயம், செல்வப் பெருக்கு என்று எல்லாவற்றையும் கணிக்க முடியும்.  முற்காலத்தில் ராஜாக்கள் சித்திரை வருஷப் பிறப்பின் போது பயபக்தியுடன் கடவுளை வழிபட்டு, பஞ்சாங்கப் பலனைக் கேட்டார்கள். அந்தப் பலன்களின்  அடிப்படையில், நாடு நலம் பெற என்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்